search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சென்னையில் 14 இடங்களில் வழிப்பறி- போலீஸ் வேட்டையில் 1000 ரவுடிகள் சிக்கினர்
    X

    சென்னையில் 14 இடங்களில் வழிப்பறி- போலீஸ் வேட்டையில் 1000 ரவுடிகள் சிக்கினர்

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 இடங்களில் செயின் மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

    இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியவில்லை.

    மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் செல்லும் இளைஞர்கள் பட்டப்பகலிலும், இரவு நேரங்களிலும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் தனியாக நடந்து செல்லும் ஆண்களை குறி வைத்து செல்போன்களையும் பறிக்கிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 14 பேரிடம் செயின் மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்டன. புரசைவாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், அயனாவரம், சிந்தாதிரிப்பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர்.

    உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் இச்சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க நேற்று இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை மாநகர் முழுவதும் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். 100 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அனைத்து சாலைகளிலும், 10 மணிக்கு பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    மெரினா கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மோட்டார் சைக்கிள்களின் வேகத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

    இது மட்டுமின்றி சென்னை மாநகர் முழுவதும் 740 லாட்ஜுகளில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனையில் நேற்று ஒரே நாள் இரவில் சுமார் 3 ஆயிரம் பேர் சிக்கினர். இவர்களை அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. இவர்களில் 1,125 பேர் ரவுடிகள்.

    தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் ரவுடிகள் பட்டியலில் சேர்த்து வைத்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ரவுடிகளின் சரித்திர பதிவேடு பட்டியல் தயாரித்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பிடிபட்ட 1,125 பேரும் இந்த ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    குற்றப்பின்னணி கொண்ட 1,325 பேரும், பிடிவாரண்டு குற்றவாளிகள் 32 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 15 பேரும் பிடிபட்டனர்.

    நேற்று இரவு ஒருநாள் மட்டும் மொத்தம் 10 ஆயிரம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 1000-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டன.

    இந்த சோதனையின்போது முறையான ஆவணங்கள் இல்லாத 69 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 79 பேரும், குடிபோதையில் சென்ற 159 பேரும் சிக்கினர்.

    இதற்கிடையே வழிப்பறி சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் பற்றி போலீசார் துப்பு துலக்கினர்.

    இதனை தொடர்ந்து திருவொற்றியூர், சாத்தான் காட்டு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் பதிவான கேமரா காட்சி போலீசுக்கு கை கொடுத்தது. பார்த்திபன், மணி ஆகிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே வேப்பேரி பகுதியில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்களும் சிக்கினர். சித்தார்த் என்ற வாலிபர் தலைமையில் அப்பகுதியில் கூட்டாக இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிட்லப்பாக்கத்தில் விக்னேஷ் என்ற வாலிபர் பிடிபட்டார். மாங்காட்டிலும் 2 வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

    போலீசார் நடத்திய நள்ளிரவு வேட்டையில் பைக் ரேசில் ஈடுபட்ட 42 பேரும் சிக்கினர். அவர்களது மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பைக் ரேசில் ஈடுபட்டு சிக்கிய இளைஞர்களுக்கும், வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

    சென்னையில் தொடரும் செயின் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களால் பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். சாலையில் நடந்து செல்லுவதற்கே அச்சமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    எனவே வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. #Tamilnews

    Next Story
    ×