search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, நீலகிரியில் பலத்த மழை
    X

    கோவை, நீலகிரியில் பலத்த மழை

    கோவை மாவட்டம் வால்பாறையில் 8-வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியது.
    காந்தல்:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

    இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் மட்டும் லேசான மழை பெய்தது.

    இரவு கடும் மழை நீடித்தது. விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அடிக்கடி மின்சாரம் தடை படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    பலத்த மழை மற்றும் கடும் குளிர் காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை பெரிதும் குறைந்தது.

    இதனால் சுற்றுலா தலங்களான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனையம், ரோஜா பூங்கா உள்ளிட்டவைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ரோடுகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை.

    தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமப்பட்டனர். அவர்கள் குடை பிடித்தபடியும், ரெயின் கோட் அணிந்தபடியும் சென்றனர்.

    ஊட்டி- கோத்தகிரி சாலையில் ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினார்கள்.

    ஆங்காங்கே சிறிய மரங்கள் விழுந்தது. இதனை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 100 அடியாகும். அணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 96.25 அடி தண்ணீர் உள்ளது. நேற்று மாலை 3 மணி நிலவரப்படி அணைக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று 6 ஆயிரம் கன அடியாக குறைந்து விட்டது.

    பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இன்று 6-வது நாளாக ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    Next Story
    ×