search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி ஆற்றில் சிக்கிக்கொண்ட கணவன்-மனைவி மீட்பு
    X

    பவானி ஆற்றில் சிக்கிக்கொண்ட கணவன்-மனைவி மீட்பு

    பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் சிக்கிக்கொண்ட கணவன்-மனைவி 6 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டனர்.
    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள வன பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை பாலம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் ஆகிய பாலங்களை தொடும் அளவிற்கு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    நேற்று அமாவாசை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். பக்தர்களின் நலன் கருதி கோவில் நிர்வாகம் சார்பில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சைரன் மூலம் ஒலி எழுப்பியும், ஒலி பெருக்கி மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் தீயணைப்பு துறையினரும், கோவில் பணியாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே தமிழக - கேரள எல்லையில் அட்டப்பாடி கிராமம் உள்ளது. இங்கு பாலக்காடு மாவட்டம் பட்டிமாளம் பகுதியை சேர்ந்த சுகுணன் (70), அவரது மனைவி வல்சம்மா (65) ஆகியோர் ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்து வருகின்றனர்.

    இவர்களது தோட்டத்துக்கு பவானி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். கடந்த 8-ந் தேதி இவர்கள் தோட்டத்தில் இருந்த போது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    உடனே இருவரும் வெளியேற முயன்றும் முடியவில்லை. ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் நின்று கொண்டனர். இந்த நிலையில் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.

    இவர்கள் இருவரும் சிக்கி கொண்டது யாருக்கும் தெரியவில்லை. செல்போனும் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஆற்றின் மறு கரையில் நின்று பார்த்த போது கணவன்-மனைவி ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டில் அமர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அட்டபாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் இரு மரங்களுக்கிடையே கயிறு கட்டி கணவன்-மனைவியை மீட்டனர்.

    6 நாட்களாக தவித்த தம்பதிகள் மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாப்பிடாமல் சோர்வுற்று இருந்ததால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கோவை மாவட்டம் வால்பாறையில் 8-வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதியடைந்தனர். கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    இன்று காலையும் மழை நீடித்தது. இதனால் காந்திபுரம், சிங்கா நல்லுர், கவுண்டம் பாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கி நின்றது.

    மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் அவதிப்பட்டனர்.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    பீளமேடு விமான நிலையம்-1, மேட்டுப்பாளையம்-2, பொள்ளாச்சி- 25, பெரிய நாயக்கன் பாளையம்-4, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்-4.60, சின்கோனா-120, சின்னக் கல்லார்-116, வால்பாறை ( பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம்) -97, வால்பாறை தாலுகா அலுவலகம்- 107, கோவை தெற்கு - 3. மாவட்டம் முழுவதும் மொத்தம் 479.60 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×