search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்சம் வாங்குவதை தடுக்க கமிட்டி உருவாக்கப்படும் - ராதாகிருஷ்ணன்
    X

    அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்சம் வாங்குவதை தடுக்க கமிட்டி உருவாக்கப்படும் - ராதாகிருஷ்ணன்

    அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்சம் வாங்குவதை தடுக்க கமிட்டி உருவாக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #GovernmentHospitalBribe

    மதுரை:

    மதுரையில் புதிய அரசு மருத்துவமனை அருகே சூப்பர்மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பணிகள் மார்ச் மாதம் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் பணியில் தாமதம் ஏற்பட்டதைத்தொடர்ந்து ஜூலை மாதம் இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    முதலில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு தொடங்கப்படும்.

    சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குடல், இரைப்பை, மூளை நரம்பியல், சிறுநீரகவியல், ஒட்டுறுப்பு சிகிச்சை, உடற் கூறுகள் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் ஆகிய சிகிச்சை பிரிவுகள் செயல்படும்.

    மதுரை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில் முதன் முறையாக 3-ம் பாலின அறுவை சிகிச்சைத்துறை ஏற்படுத்தப்படும்.

    எய்ம்ஸ் மருத்துவ மனையை தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது. இனி மத்திய அரசின் கையில் தான் உள்ளது.

    மதுரை அரசு மருத்துவ மனையில் உயரக்குறைபாடு உடைய குழந்தைகள் அதி நவீன வசதிகளுடன் கூடிய நாளமில்லா சுரப்பி வளர்ச்சி எனப்படும் சிகிச்சையின் மூலம் 11 பேர் பலன் பெற்றுள்ளனர்.

    கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் இறந்தவர்களின் உடல்களை அடுக்கி வைக்க பணம் கேட்டதாக புகார்கள் வந்துள்ளன.

    அரசு ஆஸ்பத்திரிகளில் பிணவறை, குழந்தை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் பணம் கேட்பது வழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை தடுக்க அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டு அதன் அறிக்கை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 90 சதவீத டாக்டர்கள் தன்னலமின்றி சேவையாற்றி வருகின்றனர். 10 சதவீத டாக்டர்கள் மீது குறைபாடு உள்ளது. எங்களிடமும் கருப்பு ஆடுகள் உண்டு.

    சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கேரளாவின் ‘நிபா’ வைரசைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதனை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ மனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை அரசு மருத்துவ மனையில் ஒப்பந்த சுகாதாரப்பணியாளர் வைரமணி நேற்று தற்கொலை செய்துள்ளார். அதுபற்றி புகார் வந்தால் விசாரணை நடத்தி அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 95 சதவீதம் பேர் நிரந்தர பணியாளர்களே உள்ளனர். காவலாளி, துப்புரவு பணியாளர் ஆகிய பிரிவுகளில் தான் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர்.

    ஐகோர்ட்டு வளாகத்தில் ஆம்புலன்சு வர தாமதமானதால் ஒருவர் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 936 ஆம்புலன்சுகள் உள்ளன. நகர்ப்புற பகுதிகளுக்கு 10 நிமிடத்திலும், கிராமப் புற பகுதிகளுக்கு 11 1/2 நிமிடத்திலும் ஆம்புலன்சுகள் சென்று வருகின்றன.

    சில நேரங்களில் போக்கு வரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஆம்புலன்சு வருகையில் தாமதம் ஏற்பட்டு விடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #GovernmentHospitalBribe

    Next Story
    ×