search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே பயணிகள் நிழற்குடைக்குள் கார் புகுந்ததில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
    X

    அரியலூர் அருகே பயணிகள் நிழற்குடைக்குள் கார் புகுந்ததில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

    அரியலூர் அருகே இன்று காலை பயணிகள் நிழற்குடைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர். 4பேர் காயமடைந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் கீழப்பளூர் அருகே வாரணவாசி திருச்சி சாலையில் பஸ் நிழற்குடை உள்ளது. இன்று காலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக நிழற்குடையின் கீழ் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி நிழற்குடைக்குள் புகுந்தது. இதில் அங்கு நின்றிருந்த அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி மருதமுத்து (வயது 70), இளங்கோவன் (55) ஆகியோர் மீது மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பயணிகள் திருநாவுக்கரசு, சாமிநாதன், கொளஞ்சி, பள்ளி மாணவன் விக்கிரமதி (15) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அரியலூர் டி.எஸ்.பி. மோகன்தாஸ் மற்றும்கீழப்பளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் , சம்பவம் நடந்ததும் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். காரில் கட்சி கொடி கட்டப்பட்டுள்ளது. இதனால் விபத்தை ஏற்படுத்திய நபர் அரசியல் கட்சி பிரமுகராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

    விபத்தில் பலியான இளங்கோவனின் பேரன் விக்கிரமதி. இவன் கீழப்பளூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறான். அவனை பஸ் ஏற்றி விடுவதற்காக இளங்கோவன் பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தார். இந்தநிலையில் பேரன் கண் முன்பே இளங்கோவன் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், வாரணவாசி பயணிகள் நிழற்குடை அருகே வேகத்தடை அமைக்க கோரியும் அப்பகுதி பொதுமக்கள் திடீரென அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×