search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் பேராசிரியர் நியமனத்தில் ஊழல் - திருநாவுக்கரசர்
    X

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் பேராசிரியர் நியமனத்தில் ஊழல் - திருநாவுக்கரசர்

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் பேராசிரியர், துணை பேராசிரியர் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி பகுதியில் உள்ள ஏழைஎளிய மாணவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு, தொன்னூறுகளில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம். தொடக்க காலத்தில் துணை வேந்தர்களின் நேர்மையான நிர்வாகத்தினால் கல்விப் பணி சிறப்பாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் ஆட்சியாளர்களின் தலையீடு காரணமாக பல்வேறு குளறுபடிகள் ஏற்பட ஆரம்பித்தன.

    தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமனம் என்பது தகுதி அடிப்படையில் இல்லாமல் அரசியல் சார்பான முடிவாக மாறி, பின் ‘கோடிகள்‘ மட்டுமே தகுதியை தீர்மானிப்பதாக அமைந்து விட்டது. அதன் காரணமாக பின்பகுதியில் வந்த துணை வேந்தர்கள் பல்கலைக் கழக வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் முதலீட்டு பணத்திற்கு லாபம் சம்பாதிக்கிற நோக்கத்தில் முனைப்பு காட்ட ஆரம்பித்தார்கள்.

    பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர் நியமனங்களில் ஊழல் கரை புரண்டு ஓடத் தொடங்கியது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது பல்கலைக் கழகத்தின் தாரக மந்திரமாக மாறியது. இதனால் கல்வியின் தரம் அதளபாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் சமீபகாலமாக பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைத்த அடிப்படை தகுதிகளை காற்றில் பறக்க விட்டு பேராசிரியர், இணை பேராசிரியருக்கான பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளன. 27 பணி நியமனங்களில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவு தொடங்க அங்கீகாரம் வழங்குவதில் அப்பட்டமான விதிமுறை மீறல்கள் நடைபெற்று ஊழலுக்கு வழிவகுத்துள்ளன.

    பல்கலைக் கழக மானியக் குழு விதிகளின்படி ஒருவர் துணை வேந்தர் ஆவதற்கு 10 வருடங்கள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது துணை வேந்தராக உள்ளவர் 7 வருடங்கள் தான் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். எனவே, இவரது நியமனம் செல்லாது என்பதை கூறுவதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

    மேற்சொன்ன அப்பட்டமான விதிமீறல்கள் அனைத்தையும் ஆதாரங்களோடு அறிக்கையாக தொகுத்து தமிழக ஆளுநரிடம் 18.4.2018 அன்று நேரிடையாக மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், மதுரை தெரசா, அழகப்பா பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் வழங்கியிருக்கிறார்கள்.

    ஆளுநர் அறிக்கையை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தும் இது வரை எந்த நடவடிக்கையும் கடந்த இரண்டு மாதங்களாக எடுக்கப்படவில்லை.

    எனவே, பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நிர்வாகம் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #Thirunavukkarasar

    Next Story
    ×