search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து சேதம்
    X

    மன்னார்குடி போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து சேதம்

    மன்னார்குடி போக்குவரத்து கழக பணிமனையில் அணைக்காமல் சென்ற வெல்டிங் கியாஸ் தீ பஸ்சில் பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் தப்பின.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கிருந்து வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சுமார் 40-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இன்று காலை பணிமனையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில் வேலை நடந்து கொண்டிருந்தன. இதற்காக வெல்டிங் தொழிலாளர்கள் பஸ்சுக்கு அடியில் வெல்டிங் அடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு பஸ்சில் வெல்டிங் வேலை பார்த்த ஒரு தொழிலாளி திடீரென சாப்பிட கிளம்பி சென்றார். வெல்டிங் கியாசை அணைக்காமல் அவர் சென்றதால் அந்த தீ பஸ்சில் பிடிக்க தொடங்கியது.

    சிறிது நேரத்தில் தீ மளமள என்று பரவி வேகமாக பஸ்சின் மற்ற இடங்களில் பரவ தொடங்கியது. இதனால் அரசு பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

    அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கிருந்து அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் இந்த தீ விபத்து குறித்து மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அரசு பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அரசு பஸ் முன்பக்க பகுதி எரிந்து நாசமானது.

    இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பணிமனையில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தீ விபத்தில் இருந்து தப்பின.

    ஊழியரின் கவனக் குறைவால் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து கழக அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×