search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் துறையில் தமிழகம் பின்தங்கியதற்கு ஊழலே காரணம் - ராமதாஸ்
    X

    தொழில் துறையில் தமிழகம் பின்தங்கியதற்கு ஊழலே காரணம் - ராமதாஸ்

    தொழில் துறையில் தமிழகம் பின்தங்கியதற்கு ஊழலே காரணம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 15-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தொழில் துறை முதலீடுகளை ஈர்த்து புதிய நிறுவனங்களை தொடங்கினால் மட்டுமே தமிழகம் முன்னேற முடியும் என்ற நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. தமிழகத்தின் இந்த பின்னடைவு கவலை அளிக்கிறது.

    மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை 2017-ம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் வழக்கம் போலவே ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

    உண்மையான அக்கறையுடன் பரிந்துரைகளை செயல் படுத்தும் மாநிலங்கள் மிகவும் எளிதாக முதலிடத்தை பிடிக்க முடியும். ஆந்திரா அப்படித்தான் முதலிடத்தைப் பிடித்து வருகிறது. தமிழகத்திற்கும் முதலிடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    ஆனால், ஆந்திரா 98.42 சதவீதம் சீர்திருத்தங்களை செய்து முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழகம் 90.68 சதவீதம் சீர்திருத்தங்களை மட்டுமே செய்ததால் தான் 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள சீர் திருத்தங்களை தமிழகத்தால் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் தமிழக அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழல் என்பதைத் தவிர வேறல்ல.

    தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் ஆந்திராவும், தெலுங்கானாவும் தான் தமிழகத்திற்கு கடுமையான போட்டியை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே இது தான் நிலை எனும் போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

    ஆனால், தொழில் தொடங்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்குவதை பினாமி ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்பதால் தான், தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்கள் கூட ஆட்சியாளர்களுக்கு கையூட்டு கொடுக்கத் தயங்கி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு செல்கின்றனர்.

    தொழில்துறையில் தமிழகம் அடைந்து வரும் பின்னடைவு வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படாததால் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதுடன், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறைந்திருக்கிறது.

    இதனால் தமிழ்நாட்டின் கடன் சுமை ஆண்டுக்கு 29.85 சதவீதம் வீதம் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கடன்களை தமிழகம் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், அப்போது தமிழகம் கடுமையான கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. இச்சிக்கலை சரி செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் கையூட்டை வாங்கிக் குவிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டுகின்றனர்.

    தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியாத வரை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடையப் போவதில்லை. பினாமி ஆட்சி நீடிக்கும் வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியப் போவதில்லை.

    எனினும், வெகுவிரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும்; அதன்பின்னர் அமையும் ஆட்சியில் முதலீட்டை ஈர்க்க சிறப்புத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பது மட்டும் உறுதி!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×