search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.68 அடியாக உயர்ந்து பிற்பகல் 103 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Cauvery #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது.

    இதே போல கேரளாவில் வயநாடு மலைப்பகுதியில் பெய்த கன மழையால் மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    கபினி அணையில் இருந்து நேற்று 35 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 81 ஆயிரத்து 841 கன அடி என மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 841 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

    இன்று காலை கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 71 ஆயிரத்து 353 கன அடியாக இருந்த நிலையில் தண்ணீர் திறப்பு 40 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து குறைய வாய்ப்புள்ளது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அந்த அணைகளில் நாளை மறுநாள் கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி சிறப்பு பூஜை செய்கிறார். அப்போது அணை முழு கொள்ளவுடன் இருக்க வேண்டும் என்பதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. இன்று காலை ஒகேனக்கலில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 10-வது நாளாக இன்றும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கலில் 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக வரும் தண்ணீர் காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி மேட்டூர் அணை நோக்கி வருகிறது. இதனால் காவிரி கரையில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



    மேட்டூர் அணைக்கு நேற்று 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1 லட்சத்து 4 ஆயிரத்து 436 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 95.73 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.68 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 103 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தட்சிணாய புண்ணிய நதியான காவிரியில் 4 ஆண்டுகளுக்கு பின்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புண்ணிய கால தொடக்கமான ஆடி மாதம் 1-ந் தேதியே மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையை கட்டி 83 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று 64 வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    இதற்கிடையே நீர்மட்டம் 100 அடியை தாண்டியதை அடுத்து அணையின் இடது கரையில் அணை செயற்பொறியாளர் தேவராஜன், உதவி பொறியாளர் மதுசூதனன் மற்றும் ஊழியர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக நாளை (19-ந் தேதி) காலை 10 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா, அன்பழகன், கருப்பண்ணன், விஜயபாஸ்கர் மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. #Cauvery #MetturDam

    Next Story
    ×