search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சுகாதாரத்துறையில் 642 காலி பணியிடங்கள்- நாராயணசாமி தகவல்
    X

    புதுவை சுகாதாரத்துறையில் 642 காலி பணியிடங்கள்- நாராயணசாமி தகவல்

    புதுவை சுகாதாரத்துறையில் குரூப் ஏ 108, பி மற்றும் சி 216, டி பிரிவில் 318 பதவிகள் என மொத்தம் 642 பதவிகள் காலியாக உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    ஜெயமூர்த்தி:- அரசு பொதுமருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி எவ்வளவு மதிப்பீட்டில் எப்போது வாங்கப்பட்டது?

    தற்போது எவ்வளவு காலமாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செயல்படவில்லை? இதை செயல்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சுகாதாரத்துறையில் முதுநிலை மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர் வரை எந்தெந்த பதவி எவ்வளவு காலியாக உள்ளது? இதை நிரப்ப அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    முதல்- அமைச்சர் நாராயணசாமி: அரசு மருத்துவமனைக்கு 2001-ம் ஆண்டு ரூ.5 கோடியே 37 லட்சம் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் வாங்கப்பட்டது. இதை பராமரிக்க தனியார் நிறுவனத்தோடு 2007-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு டிசம்பர் முதல் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயங்கவில்லை.

    ஸ்கேன் வழங்கிய நிறுவனத்தை பழுதுநீக்கவும், செயல்படுத்தவும் அழைத்தோம். அவர்கள் பழுதிற்கு அப்பாற்பட்டது என சான்றளித்து விட்டனர். சுகாதாரத்துறையில் குரூப் ஏ 108, பி மற்றும் சி 216, டி பிரிவில் 318 பதவிகள் என மொத்தம் 642 பதவிகள் காலியாக உள்ளது.

    மத்திய தேர்வாணையம் மூலமாக காலி மருத்துவ பணிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப் பினும் அனைத்து காலி பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு மருத்துவ அதிகாரிகளால் நிரப்பப்பட்டு வருகிறது.

    குரூப் பி, சி, டி காலி பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்கேன் எந்திரம் பழுதடைந்துள்ளதால் ஒப்பந்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து வருகின்றனர்.

    ஆண்டுக்கு ரூ.25 லட்சம் இதற்காக செலவாகிறது. தனியார் பங்களிப்புடன் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிறுவி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.
    Next Story
    ×