search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்மையான தலைவர் போல பேசியுள்ளீர்கள் - ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி
    X

    உண்மையான தலைவர் போல பேசியுள்ளீர்கள் - ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி

    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பிரதமருக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்துக்கு ஸ்டாலின் ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். #MKStalin #RahulGandhi
    புதுடெல்லி:

    மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் , கடந்த 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

    இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரும் நாடாளுமன்ற தொடரில் நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசி வரும் பிரதமர் மோடி, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.



    ராகுல் காந்தியின் கடிதத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்த திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளில் மகளிர் இடம்பெற கருணாநிதி எப்போதும் ஆதரவாக இருப்பார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் உங்களது முயற்சிக்கு எனது கட்சி சார்பில் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்’ என ட்வீட் செய்திருந்தார்.

    ஸ்டாலினின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘நன்றி ஸ்டாலின். தமிழகத்தின் சிறந்த மகன் மற்றும் உண்மையான தலைவர் போல பேசியுள்ளீர்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்கள் உந்துசக்தியாக இருக்கின்றனர். இதனை, இடஒதுக்கீடு மசோதா உறுதி செய்கிறது. இம்மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது’ என பதில் ட்வீட் செய்துள்ளார். 
    Next Story
    ×