search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஸ்ரீமுஷ்ணத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    X
    ஸ்ரீமுஷ்ணத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஸ்ரீமுஷ்ணத்தில் கோஷ்டி மோதல்- 2 பேர் படுகாயம்

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வக்காரமாரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 44), விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளராக உள்ளார். ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கீழ் புளியங்குடி தாமரை ஏரியில் வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளார்.

    இந்த ஏரியில் இருந்து வண்டல் மண் ஏற்றிசெல் ம் டிராக்டர்கள் கீழ்புளியங்குடி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி வழியாக சென்றுவந்தது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என கூறி அந்த வழியாக டிராக்டர்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர் மெகரூன்நிஷா சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

    இதை அறிந்த ரவி பள்ளி தலைமை ஆசிரியர் மெகரூன் நிஷாவின் கணவர் சேட்டிடம் உங்கள் மனைவி எதற்காக புகார் கொடுத்தார் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு ரவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேருடன் ஸ்ரீமுஷ்ணம் அண்ணா சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சேட் மற்றும் அவரது உறவினர்களுக்கும் ரவி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர்.

    இந்த தாக்குதலில் ரவி மற்றும் சேட் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ரவியை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து இரு தரப்பினரும் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தனர். இதில் ரவி கொடுத்த புகாரின் பேரில் சேட் உள்பட அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சேட் அளித்த புகாரின் பேரில் ரவி உள்பட 15 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த மோதல் சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×