search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டர்கள் மீண்டும் குவிந்தனர்- கலைந்து செல்ல போலீசார் வேண்டுகோள்
    X

    தொண்டர்கள் மீண்டும் குவிந்தனர்- கலைந்து செல்ல போலீசார் வேண்டுகோள்

    தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் மீண்டும் குவிந்ததால், அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர். முதலில் அவர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். உடல்நிலை பற்றி கவலையுடன் விசாரித்தனர்.

    அதன்பிறகு கடந்த 27-ந்தேதி நள்ளிரவில் திடீர் என்று உடல்நிலை மோசம் அடைந்ததால் கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கோபாலபுரம் இல்லத்தில் குவிந்திருந்த தொண்டர்களும் காவேரி மருத்துவமனை சென்றனர். அங்கு 3 நாட்களாக கவலையுடன் காத்திருந்து உடல் நிலை பற்றி கேட்டறிந்து வருகிறார்கள்.

    காவேரி ஆஸ்பத்திரி முன் ஏராளமானோர் திரண்டு இருந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கருணாநிதியை பார்க்க வரும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முடியாமலும் வெளியே வர முடியாமலும் நெரிசலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

    போலீசார் கடுமையான போராட்டத்துக்கு பின் கூட்டத்தை விலக்கிவிட்டு தலைவர்களின் கார்களுக்கு வழிவிட செய்து வருகிறார்கள்.

    தொடர்ந்து அங்கு இந்தநிலை நீடிப்பதால் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி முன்கூடியுள்ள தொண்டர்களை கலைந்து போகச் சொல்லி வருகிறார்கள். போலீசார் எவ்வளவோ சொல்லியும் கூட்டம் கலைய மறுத்துவிட்டது. நேற்று இரவு திடீர் என்று அதிக அளவில் தொண்டர்கள் திரள தொடங்கினர்.


    இதை தொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரி முன் கூடியிருந்த தொண்டர்களை கலைந்து போகுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்த நேரத்தில் பொது செயலாளர் அன்பழகன் வந்த காரும் தொண்டர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டது. அவருக்கு வழிவிட சிரமம் ஏற்பட்டது. தொண்டர்கள் கலைய மறுத்ததுடன் போலீசாரின் தடுப்பு வேலியை தள்ளிவிட்டுச் சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

    அதன்பிறகு கூட்டம் கலையத் தொடங்கியது. இன்று காலையில் மீண்டும் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். அவர்களை ஆஸ்பத்திரி கேட் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆஸ்பத்திரிக்குள் யாரையும் நுழைய விடவில்லை.

    நாலாபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் அரண்போல் நின்று இருந்தனர். முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் வேறு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    ஆஸ்பத்திரிக்கு வெளியே திரண்டுஇருக்கும் தொண்டர்கள் ‘‘ஓடிவா தலைவா...எழுந்து ஓடிவா...தலைவா’’ என்று கோ‌ஷம் எழுப்பியவாறு இருந்தனர். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    Next Story
    ×