search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8வழிசாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்,பொதுமக்கள் அன்புமணியை சந்தித்து நன்றி தெரிவித்தபோது எடுத்தபடம்
    X
    8வழிசாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்,பொதுமக்கள் அன்புமணியை சந்தித்து நன்றி தெரிவித்தபோது எடுத்தபடம்

    எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு- அன்புமணி ராமதாஸ்

    தார் ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதில் ஊழல் என பல்வேறு துறைகளில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக தேவைப்பட்டால் நாங்களும் சட்ட ரீதியாக அணுகுவோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். #Anbumani #EdappadiPalaniswami
    சேலம்:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று சேலத்துக்கு வந்தார். அவரை சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் ராமலிங்கபுரம், பாரப்பட்டி, பூலாவாரி, பருத்திக்காடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் சந்தித்தனர்.

    அப்போது அவர்கள் நிலம் கையகப்படுத்த கோர்ட்டில் இடைக்கால தடை பெற்று தந்ததற்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தார்.

    சேலம்-சென்னைக்கு 3 தேசிய நெடுஞ்சாலைகளும், 2 ரெயில் பாதைகளும், ஒரு விமான சேவையும் உள்ளது. இதனால் 8 வழிச்சாலை திட்டம் தேவையில்லை. தனிப்பட்ட நபர்களுக்காகவும், இயற்கை வளங்களை அழிக்கவும் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்கிறது. இது வளர்ச்சி திட்டம் இல்லை. நிலம் பறிபோய் விடுமோ என விவசாயிகளும், அப்பகுதி மக்களும் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் அந்த திட்டத்தை எதிர்த்து நான் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். நீதிபதிகள் சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    எங்களது நோக்கம் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சட்ட ரீதியாக மட்டுமின்றி தேவைப்பட்டால் 8 வழிச்சாலைக்கு எதிராக அரசியல் ரீதியாகவும் பா.ம.க. போராட்டம் நடத்தும். இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி நிதியில் தமிழகம் முழுவதும் 33 ஆறுகளில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.

    கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த 6 வாரமாக 287 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு இருக்கிறது. மேட்டூர் அணையும் 3 முறை நிரம்பி காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. பாசனத்திற்கு 50 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், 150 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது. கால்வாய்களை சரியாக தூர்வாராததால் கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் செல்லவில்லை. சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் உபரிநீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    கே- கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து உங்கள் கருத்து

    பதில்- கருணாநிதி தி.மு.க-வுக்கு மட்டும் தலைவர் அல்ல தமிழகத்திற்கும் தலைவர் அவர். இந்தியாவிற்கே வழி காட்டியாக இருந்தவர். அவரின் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அதை அரசியலாக பார்க்க கூடாது.

    கே- முதல் அமைச்சர் மீது ஊழல் புகார் தி.மு.க கொடுத்துள்ளது.

    பதில்- பொதுப்பணித்துறையில் 7 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தார். அப்போது 5 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. அது மட்டும் அல்ல தார் ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதில் ஊழல் என பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது. தேவைப்பட்டால் நாங்களும் சட்ட ரீதியாக அணுக உள்ளோம்.

    69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் உள்ளது. இதனால் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதனால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அடுத்த நிமிடமே ஆட்சி கவிழும். இதனால் ஒட்டு மொத்த தமிழக மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
    Next Story
    ×