search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெல்மெட் கட்டாயமா? - ஈரோட்டில் வைரலாக பரவும் ‘வாட்ஸ் அப்’ குமுறல்கள்
    X

    ஹெல்மெட் கட்டாயமா? - ஈரோட்டில் வைரலாக பரவும் ‘வாட்ஸ் அப்’ குமுறல்கள்

    இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டயாம் ஹெல்மேட் அணிவது குறித்து ஈரோடு மாவட்ட வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது குமுறல்களை தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதற்கு ஈரோடு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இது பற்றி ஈரோட்டில் ‘வாட்ஸ் அப்’பில் வைரலாக பரவும் சிலரது குமுறல்கள் வருமாறு:-

    ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுமாம். ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின் சொத்துக்களை, ஆவணங்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.

    பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர் பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.

    தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் பார்த்த டாக்டர்களின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.

    ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் பதவிகளை பிடுங்க மாட்டார்கள்.

    மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.

    ஆனால் மறந்து வீட்டில் விட்டுவிட்டு வரும் ஹெல்மெட்டுக்காக இரு சக்கர வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுமாம். இது என்ன நியாயம்?...

    பஸ்சில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே லைசென்சு தரப்படுகிறது. ஆனால் சராசரியாக 110 பேர் வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல் செய்தால் ஈரோட்டுக்கு மட்டும் புதிதாக 250 பஸ் விட வேண்டும்.

    ரெயிலில் ஒரு பெட்டிக்கு 72 பேர்தான் பயணிக்க வேண்டும். சட்டப்படி ரெயில் சென்றால் முதல் பெட்டி திருப்பூரிலும் கடைசிப் பெட்டி ஈரோட்டிலும்தான் நிற்கும்.

    ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்குமா? ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரி பஸ் ஒருநாள்கூட ஓடாது.

    அரசு கேபிள் கட்டணம் 70 ரூபாய். கேள்வி கேட்டால் படம் தெரியுமா மக்களுக்கு? பாயிண்ட் டூ பாயிண்ட், எல். எஸ்.எஸ்.,எக்ஸ்பிரஸ் என பஸ் கட்டண கொள்ளையை தடுக்கலாமே? தியேட்டரில் 30 ரூபாய் டிக்கெட் 90 ரூபாய். ஆன்லைன் புக்கிங் செய்தால் மேலும் 20 ரூபாய். சைபர் கிரைம்ல கேஸ் போடலாமா?

    ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து இருக்கிறார்கள். புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா?

    குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டுவிட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா?

    ஹெல்மெட் என்பது அவசியம்தான் இல்லையென்று மறுக்க முடியாது. அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும். 20-30 கி.மீ. வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதா?

    சமீபத்தில் ஹெல்மெட் அணியாத ஒருவரை ஒரு காவலர் விரட்டி அந்த இரு சக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார். இந்த சட்டம் அமலுக்கு வந்தபின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் 30-க்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள்?

    சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ஹெல்மெட் அணிவதால். சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல், தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது.

    ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே. அதைவிட்டுவிட்டு அபராதம், பறிமுதல் என்பது சரியா? ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

    இவ்வாறு அந்த ‘வாட்ஸ் அப்’ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×