search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ந்தேதி நடக்கும் முழு அடைப்புக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு
    X

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ந்தேதி நடக்கும் முழு அடைப்புக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள போராடத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. #FuelPrice #BharatBandh #DMK #Stalin
    சென்னை:

    பெட்ரோல் - டீசல் விலையை தினசரி நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரம் எண்ணை நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டது.

    அன்று முதல் பெட்ரோல் - டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.62 ஆகவும், டீசல் ரூ.75.61 ஆகவும் விற்கிறது.

    இதே நிலை நீடித்தால் விரைவில் லிட்டர் ரூ.100-ஐ எட்டிவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக விலைவாசி உயர்வும் ஏற்பட்டு வருகிறது.

    எனவே பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மத்திய உற்பத்தி வரியையும், மாநில வாட் வரியையும் குறைக்கவும் வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி ‘பந்தை’ வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

    பந்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய பா.ஜ.க. ஆட்சி யில், மக்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி எண்ணெய் நிறுவனங்களின் அபரிமிதமான லாப நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு, லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை வேகமாக நெருங்கி வருவது, மிகுந்த கவலையளிப்பதாகவும், வேதனையளிப்பதாகவும் இருக்கிறது.

    கச்சா எண்ணை விலை சர்வதேச சந்தையில் குறைந்த போதெல்லாம் அடுத்தடுத்து “கலால் வரி” விதித்து வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தீவிரமாக கவனம் செலுத்தியதே தவிர, மக்களின் வருவாய், வாங்கும் சக்தி ஆகியவற்றைப் பற்றி, எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.

    பா.ஜ.க.விற்குச் சாதக மான மாநிலங்களில் தேர்தல் வந்தால், பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் எண்ணெய் நிறுவனங்கள், தேர்தல் முடிந்ததும் மீண்டும் எவ்விதத் தடையுமின்றி தாராளமாக வி‌ஷம் போல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

    வரலாறு காணாத பெட்ரோல்-டீசல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவோ குறைக்கவோ, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தவோ, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வேதனைத் தீயில் வெந்து கருகிக் கொண்டிருக்கும் இந்திய மக்களை வீதியில் நின்று போராடும் நிலைக்கு இறக்கியிருப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குரிய அடிப்படை இலக்கணமாக அறவே இல்லை.

    ஆகவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சார்பில், செப்டம்பர் 10-ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய “பாரத் பந்திற்கு”, தி.மு.க. மனப்பூர்வமான ஆதரவினை நல்கி, அந்த பந்த் முழு அளவில் வெற்றி பெற ஆர்வத்துடன் பங்கேற்று, அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். பந்த் நடைபெறும் தேதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறு குறு வணிகர்கள், பொது போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்குத் தக்க பாடம் புகட்டிட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    வரலாறு காணாத அளவு பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. உலகின் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு விலை உயர்வு இல்லை. கச்சா எண்ணை விலை குறைந்து உள்ள நிலையில் லிட்டர் ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்க முடியும். ஆனால் மத்திய அரசு 2 மடங்கு விலையை உயர்த்தி மக்களின் பணத்தை பறிக்கிறது.

    இதை கண்டித்து அகில இந்திய அளவில் பாரத் பந்த் வருகிற 10-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும், வணிக அமைப்புகளும், பொதுமக்களும் முழு ஆதரவு தருமாறு வேண்டுகிறேன். ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. மறைமுகமாக விலை உயர்வுக்கு வழி வகுக்கிறது. அகில இந்திய அளவில் மக்கள் பாதிக்கும் போது அகில இந்திய அளவிலான எதிர்க்கட்சி என்ற நிலையில் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    த.மா.கா.வை பொறுத்த வரை மக்களின் எண்ணங்களை என்றும் பிரதிபலிக்கும். அதன் அடிப்படையில் இந்த முழு அடைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்:-

    பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் தங்கள் வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் மத்திய - மாநில அரசுகள் மறுத்து வருகின்றன.

    இதை கண்டித்து 10-ந் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த்துக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. வணிக பெருமக்கள், பொதுமக்கள் அனைவவரும் முழு ஆதரவு அளித்து முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    முழு அடைப்பு போராட்டம் பற்றி ஆலோசிப்பதற்காக இடது சாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நான், ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மு. வீரபாண்டியன், சி.பி.ஐ.எம்.எல். சார்பில் குமார், குமரேஷ், எஸ்.யூ.சி.ஐ. (கம்யூனிஸ்டு) சார்பில் சிவகுமார், சுருளி ஆண்டவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து 10-ந்தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு இடது சாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இந்த பந்தை வெற்றிகரமாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கும் என்று திருமாவளவன் கூறினார்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது:-

    தொடர்ந்து நாள் தோறும் பெட்ரோ-டீசல் விலை உயர்வால் சாமானியர்கள், ஊழைக்கும் மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசின் தவறான பொருளாதார அணுகு முறையே இதற்கு காரணம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நல்ல முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி நடத்தும் முழு அடைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறது.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன்:-

    10-ந்தேதி நடைபெறும் பந்துக்கு முழு ஆதரவு. அனைத்து மக்களும் தங்கள் எதிர்ப்பை ஒட்டு மொத்தமாக தெரிவிக்கும் வகையில் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #PetrolDieselPrice #FuelPrice #BharatBandh #DMK
    Next Story
    ×