search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிக்கு பாலியல் மிரட்டல்- ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
    X

    மாணவிக்கு பாலியல் மிரட்டல்- ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

    காரிமங்கலத்தில் மாணவிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    அப்போது பழைய தருமபுரியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் குமார் (வயது 29) என்பவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். மாணவியிடம் அவ்வப்போது பேச்சு கொடுத்து அவருக்கு தெரியாமலேயே சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் புகைப்படம் எடுத்துள்ளார்.

    இதே போல் பல மாணவிகளிடம் பேசி புகைப்படம் எடுத்து வந்துள்ளார். மாணவிகள் இது குறித்து தங்கள் பெற்றோரிடம் புகார் கூறி உள்ளனர். அவர்களும் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அப்போதே குமாரை வேலையை விட்டு பள்ளி நிர்வாகம் துரத்தி உள்ளது.

    பின்னர் மாணவியும் அந்த பள்ளியில் இருந்து விலகி தற்போது காரிமங்கலம் அருகேயுள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார்.

    இந்த நிலையிலும் குமார் விடாமல் வாட்ஸ் அப் செய்திகளில் மாணவியின் படத்தை போட்டு மோசமாக சித்தரித்து செய்திகள் அனுப்பி உள்ளார். அத்துடன் மாணவியின் தந்தைக்கு வெவ்வேறு எண்களில் இருந்து போன் செய்து மாணவியை பற்றி தரக்குறைவாக பேசி திட்டியும் வந்து உள்ளார்.

    பின்னர் மாணவியின் தந்தை மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டு உள்ளார். அதனால் தலைமை ஆசிரியர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முற்பட்டு உள்ளார்.

    இதை அறிந்த குமாரின் உறவினர்கள் அவரை அணுகி ஒரு முறை மன்னித்து விடுமாறும், இது போல் மீண்டும் நடக்காது என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர். அதனால் தலைமை ஆசிரியர் புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்,

    தனது பெயர் காவல் நிலையம் வரை போய் விட்டதால் மிகவும் ஆத்திரம் அடைந்த குமார், சிம் கார்டுகள் விற்கும் தனது நண்பன் பாலக்கோடு, சோமனஅள்ளி பகுதியை சேர்ந்த காவேரி மகன் கோவிந்தசாமி என்பவரின் துணையோடு வெவ்வேறு சிம் கார்டுகள் மூலம் மாணவியின் தந்தையை அழைத்து அசிங்கமாகவும், ஆபாசமாகவும் மாணவியை பற்றி தொடர்ச்சியாக பேசி உள்ளனர்.

    பின்னர் முகநூல் பக்கத்தில் மாணவியின் புகைப்படத்தை அப்லோடு செய்து ’கால் கேர்ள்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று தலைமை ஆசிரியரின் எண்ணையே பதிவேற்றி உள்ளார்.

    இதன் பிறகு தலைமை ஆசிரியருக்கு ஏராளமான தொலை பேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் தலைமை ஆசிரியர் காரிமங்கலம் சப்-இன்ஸ் பெக்டர் இளவரசனிடம் புகார் செய்தார்.

    பின்னர் போலீசார் மாணவியின் தந்தைக்கும், தலைமை ஆசிரியருக்கும் வந்த அழைப்புகளின் சிக்னல் டவர் உள்ள இடங்களை கண்டு பிடித்து சென்ற போது குமாரும் அவர் நண்பர் கோவிந்தசாமியும் பிடிபட்டனர்.

    குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரது நண்பர் கோவிந்தசாமி மீது இந்திய தொலைத்தொடர்பு தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    கைதான 2 பேரும் தருமபுரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    Next Story
    ×