search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - 3 பேர் கைது
    X

    திருமங்கலம் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - 3 பேர் கைது

    திருமங்கலம் அருகே தோட்டத்தில் போலி மது தயாரிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து போலி லேபிள், மூலப் பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புளிய கவுண்டன்பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் தங்கமாயன். இவரது தோட்டத்தில் போலி மதுபானம் (பிராந்தி) தயாரிக்கப்படுவதாக மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது போலி மது தயாரிப்புக்கான பொருட்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 4 கேன்களில் 120 லிட்டர் மூலப்பொருட்கள், 13 ஆயிரம் போலி லேபிள், 5 மூட்டைகளில் 180 மில்லி பாட்டில்கள், 3 மூட்டைகளில் பாட்டில் மூடிகள் மற்றும் பேக்கிங் எந்திரம் போன்றவை தோட்டத்தில் இருந்தன.

    மேலும் போலி மது தயாரிக்கும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடமுயன்றனர். போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அங்கிருந்த போலி மது தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும், பிடிபட்ட 3 பேரும் மது விலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அவர்களது பெயர் பிரகாஷ் (வயது35), விக்னேஷ் வரன் (25), சுரேஷ் (28) என்பதும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. போலி மது தயாரிக்கப்பட்ட தோட்டத்து உரிமையாளர் தங்கமாயன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த போலி மதுபான ஆலை பல ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வந்திருக்கலாம் என்றும், இங்கு தயாராகும் போலி மது பல கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Next Story
    ×