search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மக்கள் உணர்வை புரிந்துகொள்ள தமிழக அரசு தவறி விட்டது- டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
    X

    மக்கள் உணர்வை புரிந்துகொள்ள தமிழக அரசு தவறி விட்டது- டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் பல லட்சம் மக்களின் நலனை மனதில்கொண்டு வாதாட தமிழக அரசு தவறிவிட்டதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோதே, தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் பல லட்சம் மக்களின் நலனை மனதில்கொண்டு வாதாட தமிழக அரசு தவறிவிட்டது. அதனால்தான் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தீர்ப்பு வந்தது.

    அந்த வழக்கே டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். தமிழகத்தில் அதை அமல்படுத்த அவசியமில்லை என்ற கருத்தையும் வலியுறுத்த தமிழக அரசு தவறிவிட்டது. இதன்மூலம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

    இரவு 8 மணி முதல் 10 மணி வரை என்ற கட்டுப்பாட்டில் திருத்தம் கோரி செய்த மனுவிலும் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை, அவர்களின் சவுகரியத்தை புரிந்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அதிகாலை 4.30 முதல் 6.30 வரை கூடுதல் நேரம் வேண்டும் என்று அர்த்தமற்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள்.

    குழந்தைகளும் இளைஞர்களும் பெண்களும் ஆர்வமுடன் வெடிக்கும் பட்டாசை, அந்த அதிகாலை நேரத்தில் எந்தளவுக்கு பாதுகாப்பாகவும் உற்சாகமாகவும் வெடிக்க முடியும்..? இந்த புரிதல் கூட இல்லாத மாநில அரசின் மனநிலை வேதனை அளிக்கிறது.

    இனிமேலாவது தமிழக மக்களின் உணர்வுகளையும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு, பாதுகாப்பான, கட்டுப்பாடற்ற கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு வழிவகுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDhinakaran
    Next Story
    ×