search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
    X
    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

    தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக்கமிட்டனர். #SterliteProtest #NGT
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து மே மாதம் 28-ந்தேதி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி வழக்கு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர்.

    பல அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டத்தை நடத்தவும் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போராட்டத்தை தூண்டும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து சந்தேகப்படும்படியாக யாராவது ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களுக்கு வந்து உள்ளார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    பஸ் நிலையம், ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தூத்துக்குடிக்கு வரும் அனைத்து வழிகளிலும் போலீசார் 8 சோதனைச்சாவடிகளை அமைத்து வாகன தணிக்கை செய்து வருகிறார்கள். தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதிகள், ஓட்டல்களில் சந்தேகப்படும்படியாக வெளியாட்கள் யாராவது தங்கி உள்ளனரா? என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு ஏராளமானோர் திரண்டு வரப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவல‌கத்துக்கு வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    மக்கள் கூட்டமாக கூடாமல் அமைதியாக மனு கொடுத்து செல்ல வேண்டும் என்று ஒலிப்பெருக்கிகள் மூலமாக அறிவிக்கப்பட்டது. ஆட்டோகளிலும் ஒலிப்பெருக்கி கட்டி அறிவிப்பு செய்யப்பட்டது.

    இதனிடையே தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இன்று காலை மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் இயற்றவேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் இயற்ற வலியுறுத்தி தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தீபா பேரவையினர் வாயில் கருப்பு துணி கட்டி வாயை மூடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்திய தீபா பேரவையினர்

    போராட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை மாவட்ட செயலாளர் தொண்டன் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். #SterliteProtest #NGT
    Next Story
    ×