search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - சென்னையில் 73 அமைப்புகளிடம் ப.சிதம்பரம் கருத்து கேட்டார்
    X

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - சென்னையில் 73 அமைப்புகளிடம் ப.சிதம்பரம் கருத்து கேட்டார்

    சென்னையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டத்தில் ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். #Congress #PChidambaram

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு நாடு முழுவதும் பொது மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

    இதற்காக ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார்கள்.

    அதன்படி சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் ராஜீவ்கவுடா எம்.பி. முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் தொகுத்து வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் கல்வியாளர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், வணிகர் அமைப்புகள், நெசவாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்பட 73 அமைப்புகள் பங்கேற்றன.

    முன்னாள் துணைவேந் தர்கள் டாக்டர் வசந்தி தேவி, டாக்டர் திருவாசகம் மற்றும் டாக்டர் பரசுராமன், பழனித்துரை, ஜனகராஜன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜ்குமார், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, வணிகர் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், பெட்ரோல்- டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும்.

    மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது, கல்வியும், மருத்துவமும் தனியார் மயமாகி விட்டதால் வியாபார நோக்கில் நடக்கிறது. இதை தடுக்க கல்வியையும், மருத்துவத்தையும் அரசே வழங்க வேண்டும்.

    காப்பீடுகள் வழங்குவதை அரசு நிறுவனங்களே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

    நாடு முழுவதும் திரட்டப்படும் கோரிக்கைகள் மத்திய கமிட்டியில் வைத்து எவை, எவை நிறைவேற்ற முடியுமோ அவற்றை தேர்தல் அறிக்கையாக வெளியிடுவோம் என்றனர்.

    முடிவில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி மற்றும் கோபண்ணா, முன்னாள் எம்.பி. அழகிரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உ.பலராமன், முருகானந்தம், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ஏ.ஜி.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபாஷ்யம், நிர்வாகிகள் ஜோதி, செல்வ பெருந்தகை, வில்லிவாக்கம் சுரேஷ், எம்.ஆர். ஏழுமலை, செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #PChidambaram

    Next Story
    ×