search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி முடிந்ததும் காரில் மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லும் தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன்.
    X
    பள்ளி முடிந்ததும் காரில் மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லும் தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன்.

    பள்ளிக்கு மாணவர்களை சொந்த காரில் அழைத்து வரும் தலைமை ஆசிரியர்

    கரூர் சின்னசேங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன் பஸ் வசதி இல்லாத கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகளை தனது சொந்த காரிலேயே வீட்டில் இருந்து பள்ளிக்கும், மாலை பள்ளி முடிந்ததும் மீண்டும் அதே காரில் வீடுகளில் விட்டு விடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
    கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் அருகே உள்ளது சின்னசேங்கல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுத்தரப்படுகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன்.

    இவர்தான், பஸ் வசதி இல்லாத கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகளை தனது சொந்த காரிலேயே வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வருவதும், மாலை பள்ளி முடிந்ததும் மீண்டும் அதே காரில் வீடுகளில் விட்டு விடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

    தினமும் 4 முறை காரில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வருவதற்காக தனியாக டிரைவர் யாரையும் அமர்த்தி கொள்ளவில்லை. தலைமை ஆசிரியர் அன்புச்செல்வனே டிரைவராக செயல்படுகிறார். இதற்காக வாரந்தோறும் டீசல் செலவு ரூ.3 ஆயிரத்துக்கும் மேல் ஆனது. அத்தனைக்கும் அவரே பொறுப்பேற்றுக்கொண்டார்.

    கடந்த 2012-ம் ஆண்டு சின்னசேங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அன்புச்செல்வன் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அப்போது பள்ளியில் வெறும் 58 மாணவர்களே படித்து வந்தனர். பள்ளி தொடர்ந்து செயல்பட வேண்டுமானால், அரசு விதிப்படி குறைந்தது 61 மாணவ-மாணவிகளாவது படிக்க வேண்டும்.

    பஸ் வசதி இல்லாத கிராமங்களில் குழந்தைகள் பலரை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருந்தனர். மேலும் தனியார் பள்ளிகளுக்கு செல்ல கிராமங்களுக்கு வாகன வசதி செய்து செய்யப்பட்டிருந்ததால், பலர் தனியார் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்பி வைத்து கொண்டிருந்தனர். எப்படியும் அரசு பள்ளியில் கூடுதல் மாணவர்களை சேர்த்தே ஆக வேண்டும் என லட்சியத்தில் இருந்த அவர், ஒரே மாதத்தில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை 63 ஆக உயர்த்தினார்.

    மேலும் சின்னசேங்கல் கிராமம் அருகில் உள்ள மேலதோட்டம், குட்டிக்காரன் புதூர் மற்றும் இதர கிராமங்களுக்கு சென்று, தானே தனக்கு சொந்தமான பழைய காரில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு, மாலையில் வீட்டில் விட்டு விடுகிறேன் என பெற்றோரிடம் ஒரு உறுதியை தந்தார். சொன்னபடி செய்தும் காண்பித்தார்.

    தலைமை ஆசிரியர் அன்புச்செல்வனின் கரிசனத்தை கண்ட பெற்றோர், கடந்த 2014-ம் ஆண்டு முதல் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆர்வமுடன் அரசு பள்ளிக்கு அனுப்பி வைக்க தொடங்கினர். இதனால், மாணவ-மாணவிகளும் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் காரில் பள்ளிக்கு சென்று வரும் உற்சாகத்தில் திளைத்தனர்.

    தற்போது இந்த பள்ளியில் 120 பேர் படித்து வருகிறார்கள். இவர்களில் 70 மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் தனது சொந்த காரிலேயே பள்ளிக்கு அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×