search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மதவாத சக்திகளை அகற்ற தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி- பிரகாஷ் காரத் பேச்சு
    X

    மதவாத சக்திகளை அகற்ற தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி- பிரகாஷ் காரத் பேச்சு

    மதவாத சக்திகளை அகற்ற தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம் என்று மார்க்சிஸ்டு தலைவர் பிரகாஷ் காரத் பேசியுள்ளார். #prakashkarat #dmk #pmmodi

    தக்கலை:

    மார்க்சிஸ்ட் தேர்தல் நிதி அளித்தல் மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் குமரி மாவட்டம் தக்கலையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சைமன் சைலஸ் வரவேற்றார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் தேர்தல் நிதியை பெற்றுக்கொண்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது:-

    தமிழகத்திற்கு ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? பல மதங்களையும், மொழிகளையும், கலாசாரங்களையும் கொண்ட நாடாக நீடிக்க வேண்டுமா? என்பதையெல்லாம் இந்த தேர்தல் தீர்மானிக்க உள்ளது.

    2014-ல் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா அரசு மோடி தலைமையில் அமைந்தது. பாராளுமன்ற ஜனநாயகத்தை மாற்றி ஏதேச்சதிகார நாடாக மாற்ற திட்டமிட்டது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்த அடிப்படை உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டன.

    சிறுபான்மை மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக மாற்றும் முயற்சிகள் நடந்தது. இந்தி மொழிக்கு பிரதான முன்னுரிமையும், சமஸ்கிருதத்திற்கு மேன்மை தாங்கிய மொழி என்ற நிலையையும் கொண்டுள்ளது. ஒரே மொழி, ஒரே மதம் என்ற கொள்கையை கையில் எடுக்க தொடங்கினர்.

    5 ஆண்டுகளில் பசுவதை என்ற பெயரில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டு கொள்ளப்படாமல் இருந்தனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.ஐ தனியாருக்காக அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றனர்.

    ஊழலற்ற அரசியல் தலைவர் என்று கூறி வந்தவர்கள் அனில் அம்பானிக்கு ரபேல் போர் விமானம் வாயிலாக ஊழலில் ஈடுபட்டனர்.

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று கூறியவர்கள், ஐந்து ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது.

    விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நியாய விலை கிடைக்கும் என்று கூறியவர்கள். எதுவும் வழங்காமல் உள்ளனர். கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விவசாயிகளுக்கு குறைவான வருவாய் கிடைத்துள்ளது.

    விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்றவர்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றனர். சர்வாதிகாரத்தை பயன்படுத்தி நீதித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ ஆகியவற்றை சீரழித்துள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் பாராளுமன்ற ஜனநாயகம், மதச்சார்பின்மை கேள்விக்குறியாகி விடும். நமது ஒரே குறிக்கோள் வரும் தேர்தலில் பாரதீய ஜனதா அரசை அகற்ற வேண்டும். மதசார்பற்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.

    தமிழகத்தில் பாரதீய ஜனதா, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. நமது இலக்கு தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி. கூட இந்த அணியில் இருந்து வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் கடந்த முறை பாரதீய ஜனதா ஜெயித்துள்ளது. இந்த முறை அனைத்து மதசார்பற்ற அணிகளும் ஒன்றிணைந்து பாரதீய ஜனதா வேட்பாளர் வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்துள்ள கூட்டணி வலுவான கூட்டணி. பாரதீய ஜனதா, அ.தி.மு.க. அணியை முறியடிக்க கூடிய சாத்தியமான கூட்டணி இது. இந்திய அரசியலில் மக்களை பிளவுப்படுத்த முயலக்கூடிய ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதாவை முறியடித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #prakashkarat #dmk #pmmodi

    Next Story
    ×