search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் மண்ணின் பிரச்சினைகளை புரிந்து ராகுல்காந்தி செயல்படுவார்- கனிமொழி பேச்சு
    X

    தமிழ் மண்ணின் பிரச்சினைகளை புரிந்து ராகுல்காந்தி செயல்படுவார்- கனிமொழி பேச்சு

    தமிழகத்தில் தீப்பெட்டி-பட்டாசு பிரச்சினைகளை களைய ராகுல் காந்தி புரிந்து செயல்படுவார் என்று கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் கனிமொழி பேசியுள்ளார். #kanimozhi #rahulgandhi #congress

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    இதற்கு முன்பு நடந்த தேர்தல்களை விட இந்த தேர்தல் மிக முக்கியமானது. இதுவரை நாம் சந்தித்த தேர்தல், அரசியல் கட்சிகளை எதிர்த்து நின்று தேர்தல் களத்தில் களமாடிய தேர்தல். ஆனால் இன்று இந்தியா என்ற அமைப்பை பாதுகாக்க நாம் போராடிக்கொண்டிருக்கிற தேர்தல். ஒவ்வொருவரின் கருத்து சுதந்திரத்துக்காக போராடி வேண்டிய தேர்தல்.

    இந்த நாட்டில் இந்தி மொழி மட்டும் தான் பேசப்பட வேண்டும், வேறு மொழிகள் அதன் அடையாளங்களை இழந்து விட வேண்டும், தமிழகத்தில் தமிழ் இருக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் மத்தியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதாவினர். நாடு முழுவதும் ஒரே வரி என கூறி ஜி.எஸ்.டி. கொண்டு வந்தனர். அதில் ஆயிரம் குழப்பங்கள்.

    இங்கே கோவில்பட்டியில் கடலைமிட்டாய் செய்யக்கூடியவர்கள் கூட கிட்டத்தட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு அந்த சின்ன தொழிற்சாலைகளை மூடிவிட்டு போகும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசு ஒரு வரியை மக்கள் மீது திணித்து எல்லா சிறிய தொழில்களும், வியாபாரங்களும் நசிந்து போகும் நிலையை கொண்டு வந்திருக்கிறது.

    பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற பயன்படாமல் இந்த ஆட்சி, குற்றவாளிகளை காப்பாற்ற துடித்து கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் பிரச்சினையில் அரசு துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டு கொல்கிறது. இப்படி மக்களுக்கு எதிராக உள்ள இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழகத்தில் வாக்கு வாங்க முடியும் என நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழகத்தில் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவில்லை. இப்போது தேர்தலுக்காக வருகிறார். இந்த தொகுதியில் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்தவர் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக காட்டுவேன் என பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கக்கூடிய நிலையை பார்க்கிறோம்.

    தீப்பெட்டி, பட்டாசு சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சினைகளை களைய, தி.மு.க.வும், பிரதமராக வரக்கூடிய ராகுல் காந்தி நிச்சயமாக தமிழ் மண்ணின் பிரச்சினையை புரிந்து கொண்டு செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #rahulgandhi #congress

    Next Story
    ×