search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருவண்ணாமலையில் கமல்ஹாசன் பேசிய காட்சி.
    X
    திருவண்ணாமலையில் கமல்ஹாசன் பேசிய காட்சி.

    தமிழகம் தான் என் இலக்கு - கமல்ஹாசன் பேச்சு

    நான் பயந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்கமாட்டேன். தமிழகம் தான் எங்கள் இலக்கு என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #KamalHaasan
    திருவண்ணாமலை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருவண்ணாமலை, ஆரணியில் அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் 37 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 37 ஆண்டுகளாக நற்பணி மன்றங்கள் அமைத்து உதவிகள் செய்து வந்தோம்.

    இந்த தேர்தல் நமக்கு இல்லை என முடிவு செய்தேன். ஆனால் இந்த தேர்தலில் கண்டிப்பாக தமிழக மக்களின் நலனில் அக்கறையை கருத்தில் கொண்டு களத்தில் இறங்கி உள்ளோம்.

    இந்த தேர்தலில் நான் பயத்தில் போட்டியிடவில்லை என்கிறார்கள். நான் பயந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்கமாட்டேன். தமிழகம் தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் நானே நிற்பதாக நினைத்து கொள்ளுங்கள். எங்களது வேட்பாளர்கள் உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறார்கள்.

    அவர்கள் வெற்றி பெற்ற பின்னர் சரியாக செயல்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தால் அதன் மீது விசாரணை நடத்தி எங்களது எம்.பி.க்களின் ராஜினாமா கடிதம் உங்களை வந்தடையும்.

    இந்த ஊருக்கு பட்டு ஜவுளி பூங்கா அமைத்து தருவதாக உறுதி அளித்தார்கள், செய்தார்களா? திண்டிவனத்தில் இருந்து ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரிக்கு செல்லும் ரெயில் பாதை திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.

    இதுவரை அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்களா? இங்கு அரசு கலைக்கல்லூரி இல்லை. ஆனால் தனியாருக்கு கல்வியை தாரை வார்த்ததால் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு சென்றார்கள். பார்த்தீர்களா?

    சாராயத்தை கொண்டே ஆட்சியை நடத்துகிறார்கள். அந்த துறையையும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்காணிக்கிறார். ஒரு நாட்டிற்கு முக்கியமானவை கல்வி, மருத்துவம், சுகாதாரம். ஆனால் இவற்றை தனியாருக்கு கொடுத்துவிட்டனர்.

    கல்வியை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தரமான இலவச கல்வியை கொடுக்க முடியும். இடம் கொடுத்தால் நாங்கள் செய்து காட்டுவோம்.

    எங்களை நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும். நாளைய தமிழகத்துக்கு நீங்கள் தான் மாற்றத்துக்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். காமராஜர் போன்ற நல்லவர்கள் ஆட்சியை பார்த்து வெகு காலமாகிவிட்டது. நாங்கள் அவர்களின் பாதையில் பயணிப்போம்.

    ‘மக்களை பார்த்து சுடு’ என காவல்துறையை ஏவலாக மாற்றியது இந்த அரசு. தூத்துக்குடி சம்பவம் மறக்கமுடியுமா? மறக்க முடியாது. மனதில் பதிந்துள்ளது.

    புயல் அடிக்கும்போது பிரதமர் எங்கு சென்றார். ஆனால் தற்போது 4-வது முறையாக வருகிறார். ‘கோ பேக்’ என்று கூறினாலும் அவர் ‘கம் பேக்’ என்று வந்து கொண்டிருக்கிறார். டெல்லியில் யார் வந்தாலும் தமிழகத்துக்கு பதில் கூறவேண்டும். மாற்றத்தை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும். எங்களால் இந்தியாவில் ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #KamalHaasan

    Next Story
    ×