search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் மனைவியை சந்திக்க விடாமல் அடித்து உதைத்ததால் வாலிபர் தற்கொலை - கடிதம் சிக்கியது
    X

    காதல் மனைவியை சந்திக்க விடாமல் அடித்து உதைத்ததால் வாலிபர் தற்கொலை - கடிதம் சிக்கியது

    கிருஷ்ணகிரி அருகே காதல் மனைவியை சந்திக்க விடாமல் அடித்து உதைத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முருக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு சசிகுமார் (வயது 26), சதீஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் சசிகுமார் பி.எஸ்.சி. வேளாண்மை படித்து விட்டு சொந்தமாக விவசாய பூச்சி கொல்லி மருந்துகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

    இவர் கல்லூரியில் படிக்கும்போது கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்த நரசிம்மன்-ஜோதி தம்பதியினரின் மகள் ஜெயபிரியா என்பவரை காதலித்தார்.

    இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சசிகுமாரும், ஜெயபிரியாவும் வீட்டை விட்டு சென்று கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    அப்போது காதல் ஜோடி 2 பேரும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்டனர். பின்னர் இருகுடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி சசிகுமார் பெற்றோருடன் காதல் ஜோடி தம்பதியினரை அனுப்பிவைத்தனர். கடந்த 2 வருடங்களாக சந்தோசமாக சசிகுமாரும்- ஜெயபிரியாவும் குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் படித்த சான்றிதழை வீட்டில் இருந்து எடுத்துவருவதாக கூறிவிட்டு ஜெயபிரியா தனது தாயார் வீட்டிற்கு சென்றார்.

    காதல் மனைவி சென்றவர் 2 மாதங்களாகியும் திரும்பி வரவில்லை. சசிகுமார் உடனே கிருஷ்ணகிரிக்கு சென்று ஜெயபிரியாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கூறினார். அப்போது அவர்கள் சசிகுமாரை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி மீண்டும் கிருஷ்ணகிரியில் உள்ள நரசிம்மன் வீட்டிற்கு சென்று தனது மனைவியை சந்திக்க வேண்டும் என்றும்,அவரை தன்னுடன் அனுப்பிவைக்குமாறும் கூறினார்.

    உடனே ஜெயபிரியாவின் உறவினர்கள் சசிகுமாரை தாக்கி வீட்டைவிட்டு துரத்தி அனுப்பினர். மேலும், கிருஷ்ணகிரி டவுன்போலீஸ் நிலையத்தில் சசிகுமார் வீடுபுகுந்து நகை திருடியதாக புகார் தெரிவித்தனர். இதனால் சசிகுமார் மனமுடைந்து காணப்பட்டார்.

    கிருஷ்ணகிரியில் ஆசாத் நகரில் தனது தம்பி சதீஷ் ஒரு அறை எடுத்து கல்லூரியில் படித்து வருகிறார். அங்கு சென்ற சசிகுமார், யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கீழே விழுந்தார். சசிகுமார் மயங்கி கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 2 மணியளவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்ட விசாரணையில் சசிகுமார் 3 பக்கம் கடிதம் எழுதி வைத்து விட்டு தான் அவர் வி‌ஷம் குடித்தது தெரியவந்தது.

    அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி சசிகுமாரின் உறவினர்கள் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சசிகுமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பரபரப்பு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அந்த கடிதத்தில் அவர் எழுதி இருப்பதாவது:-

    நானும் எனது மனைவி ஜெயபிரியா என்பவரும் 4 வருடங்களாக காதலித்து 17.7.2017 அன்று திருமணம் நடந்தது.

    அந்த திருமணம் பல பிரச்சினைகளை கடந்த காதல் திருமணம். எங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருந்தது.

    திருமண வாழ்க்கை 2 வருடம் அதில் ஒரு குழந்தை உருவாகி அந்த குழந்தை 4 மாதம் இருந்து இதயதுடிப்பு இல்லை என்று கருக்கலைப்பு செய்யப்பட்டது.

    அதற்கு பின்பு எனது மனைவியை இன்னும் அதிகமாக நேசித்தேன். எனக்கும், ஜெயபிரியாவுக்கும் எந்தவித சண்டையும் வந்தது இல்லை. அவள் கோபபடுவாள் ஆனால், 5 நிமிடத்தில் சரியாகிவிடும்.

    எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் 4.2.2019 தான். அன்று வேலையின் காரணமாக நான் வெளியூருக்கு சென்று விட்டேன். எனது மனைவி 6.2.2019 அன்று எனக்கு செல்போனில் தொடர்புக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு செல்வதாக கூறினாள். திருமணம் முடிந்து 2 வருடம் ஆகிறது. எனவே, அங்கு உள்ள பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றாள். நான் அப்போது வேண்டாம் என்று கூறினேன்.ஆனால் தாயாருக்கு போன் செய்து விட்டாள் என்று கூறினாள்.

    அதன் பின்பு என்னையும் எனது மனைவியையும் அவரது தாயார் ஜோதி பேச அனுமதிக்கவில்லை.

    இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதற்குள் அவளை அவரது சொந்த ஊரான சின்னமட்டாரபள்ளிக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

    அங்கு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து வைத்தேன். ஆனால் அங்கு எனக்கு உரிய மரியாதை தரவில்லை. பின்பு தான் அவர் வீட்டிற்கு சென்று பேசலாம் என்று கருதி நான் அங்கு சென்றேன்.அங்கு எனது மனைவியின் தாயார் என்னை செருப்பால் அடித்து விரட்டினர்.

    எனது மனைவியை பார்த்து 3 மாதம் ஆகிறது. மீண்டும் எனது நண்பர்களை அழைத்து கொண்டு மனைவியின் தாயார் வீட்டிற்கு சென்றேன். அப்போது எனது மாமியார், மாமனார் ஆகியோர் என்னை செருப்பால் அடித்து விரட்டி அனுப்பினர். மேலும் என் மீது 3½ பவுன் நகை திருடியதாக பொய் புகார் போலீசில் கூறினர்.

    அப்போது நான் நடத்த உண்மையை போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியதால் அவர்கள் என்னை திருப்பி அனுப்பி வைத்து விட்டனர்.

    ஆகையால் நான் எனது மனைவிக்காக எல்லாத்தையும் இழந்து விட்டேன். இனி என்னால் எனது பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அதிக கஷ்டம் கொடுத்துவிட்டேன். மேலும் நான் அவமானப்பட்டேன்.

    இது எனது வாழ்க்கையின் இறுதி கடிதம். எனது மரணத்திற்கு முக்கிய காரணம் ஜோதி, ஓம் சக்தி மற்றும் மனைவியின் சித்தி ஆகியோர் ஆவர். எனது மனைவியிடம் என்னைபற்றி தவறாக கூறி என்னை பிரித்து விட்டனர்.

    நான் எனது மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தேன். அதனால் என்னால் அவளை மறக்க முடியாது. அவள் இல்லாமல் என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாது. இனி என் மனைவியின் குடும்பம் சந்தோசமாக இருக்கும். எனது குடும்பத்துக்கு என்னை பெற்றதற்காக அவமானத்தை பெற்று கொடுத்துவிட்டேன்.

    எல்லாருக்கும் சாரி என்னை மன்னித்து கொள்ளுங்கள். ஜெய் மட்டும் தான் எப்பவும் நான் நினைப்பேன்.நாம் சுத்தின காலங்கள் நினைவுக்கு வரும் அப்போது நான் இருக்க மாட்டேன்.

    இவ்வறு அவர் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.
    Next Story
    ×