search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்
    X
    தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்

    8 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை - தனித்தீவுபோல் மாறிய அதிராம்பட்டினம்

    சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியில் அதிக அளவில் மழை நீர் தேங்கியதால் அப்பகுதி இளைஞர்கள் வடிகால் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம் கடற்கரை பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 11 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.

    விடியற்காலை 3 மணி முதல் மதியம் 11 மணி வரை இடைவிடாது மழை பெய்து வந்தது. சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கொட்டித்தீர்த கனமழையால் வீடுகள், காவல்நிலையங்கள், கால்நடை மருத்துவமனை ஆகிய பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இரவில் பல வீடுகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து கொண்டதால் பொதுமக்கள் தூங்கமுடியாமல் மழைநீரில் தத்தளித்து பெரும் அவதிப்பட்டனர்.

    மேலும் பழஞ்செட்டித்தெரு, காந்திநகர், கரையூர்தெரு, முத்தம்மாள் தெரு பிலால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் இன்று காலை வரை கண்விழித்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த குழந்தைகள் மற்றும் முதியோர்களை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

    சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியில் அதிக அளவில் மழை நீர் தேங்கியதால் அப்பகுதி இளைஞர்கள் வடிகால் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தூய்மைப் பணியாளர்கள் காலனியில் கனமழையால் பணியாளர் ஒருவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.

    மேலும் தொடர்மழை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் புரட்டி போட்டுள்ளது. அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை மறவக்காடு, கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரை தெரு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்து வருவதால் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பும் நிலை உள்ளது. இதனால் மீன்பிடி தொழிலும் பாதிப்படைந்துள்ளது.

    மேலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று காலை வரை பெய்த மழையால் மழைநீர் உப்பளங்களில் அதிக அளவில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் அவதியடைந்துள்ளனர். வெயில் அடித்தால் மட்டுமே தொழிலை தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி கிடப்பதால் தனித்தீவு போல் காட்சியளிக்கிறது.

    ஒட்டுமொத்தத்தில் அதிராம்பட்டினத்தில் இன்று வரலாறு காணாத அடைமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. 

    Next Story
    ×