search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆழியார் அணை பூங்கா
    X
    ஆழியார் அணை பூங்கா

    கொரோனா பரவல் எதிரொலி- ஆழியார் அணை பூங்கா இன்று முதல் 2 நாட்கள் மூடல்

    புத்தாண்டையொட்டி இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து விடுவார்கள் என்பதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆழியார் பூங்கா இன்று மற்றும் நாளை என 2 நாட்களுக்கு மூடப்படுகிறது.
    ஆனைமலை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து ஆழியார் அணை உள்ளது. இந்த அணை பகுதியில் உள்ள பூங்கா மற்றும் அணையை சுற்றி பார்க்க கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    குறிப்பாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதமாக ஆழியார் அணைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் பல மாதத்திற்கு பிறகு மீண்டும் ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை காரணமாக கடந்த ஒரு வார காலமாக ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் புத்தாண்டையொட்டி இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து விடுவார்கள் என்பதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆழியார் பூங்கா இன்று மற்றும் நாளை என 2 நாட்களுக்கு மூடப்படுகிறது. இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றும் ஓட்டப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 நாட்கள் ஆழியார் பூங்கா மூடப்படுவதாகவும், 3-ந் தேதி மீண்டும் திறக்கப்படும் என எழுதப்பட்டுள்ளது.

    இன்று புத்தாண்டு என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் ஆழியாருக்கு வந்தனர். ஆனால் அணை பகுதிக்கு செல்ல அனுமதி இல்லாததால் சாலையோரங்களில் நின்று, இயற்கை அழகை ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர்.
    Next Story
    ×