search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூலூரில் 2-வது நாளாக போர் விமான பயிற்சி
    X

    சூலூரில் 2-வது நாளாக போர் விமான பயிற்சி

    • விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவது குறித்து பயிற்சியும் நடக்க உள்ளது.
    • 61 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    சூலூர்:

    இந்திய விமானப்படை சார்பில் தாரங் சக்தி 2024 என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி இந்தியாவில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    முதல் கட்ட பயிற்சி நேற்று முதல் வருகிற 14-ந் தேதி வரை சூலூரிலும், 2-வது கட்ட பயிற்சி செப்டம்பர் 1 முதல் 14-ந் தேதி வரை ஜோத்பூரிலும் நடக்கிறது.

    முதல் கட்ட பயிற்சி நேற்று சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதில் இந்திய விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி, ஜெர்மனி நாட்டின் விமானப்படை தலைமை தளபதி இங்கோ ஹெர் ஹார்ட்ஸ் மற்றும் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டின் துணை தளபதிகள் பங்கேற்றனர்.

    இதில் 5 நாடுகளை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று விமான கூட்டு பயிற்சிக்கு வந்த ஜெர்மனி தலைமை தளபதிக்கு, இந்திய நாட்டின் 5 தேஜஸ் ரக விமானங்கள், பறந்து சென்று வானில் வட்டமடித்தபடி வரவேற்பு அளித்தனர்.

    இன்று 2-வது நாளாக விமான கூட்டு போர் பயிற்சி நடந்தது. இதில் 5 நாடுகளை சேர்ந்த விமானங்களும், ஒரே நேரத்தில், ஒரே கட்டளையின் கீழ், எவ்வாறு ஒருங்கிணைந்து பறப்பது என்பது பற்றி பயிற்சி மேற்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து, வானில் பறந்தபடி, ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவது குறித்து பயிற்சியும் நடக்க உள்ளது.

    பயிற்சியின் முடிவில் சிறப்பு கண்காட்சியும் நடக்கிறது. இதில் 5 நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்களும் பல்வேறு சாகசங்களில் ஈடுபட உள்ளனர். அத்துடன் விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன கருவிகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து இந்திய விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறியதாவது:-

    61 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு தொழில்நுட்பங்களை பெற முடியும். நமது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தவும், ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக அமையும். விமானப்படை உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் கால்பதித்து வருகிறது. இது பாராட்டத்தக்கது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×