search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஒரே பதிவு எண்ணில் 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறதா?- தமிழக அரசு விளக்கம்
    X

    ஒரே பதிவு எண்ணில் மூன்று தோற்றத்தில் அரசு பஸ்.

    ஒரே பதிவு எண்ணில் 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறதா?- தமிழக அரசு விளக்கம்

    • ஒரே பதிவு எண்ணில் 3 பஸ்கள் ஓடுவது சாத்தியமா? என்ற குழப்பம் நிலவியது.
    • ஒரே பஸ், மூன்று கட்டங்களில், மூன்று தோற்றத்தில், மூன்று வழித்தடத்தில் ஓடியது தெரியவந்துள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு சார்பில் 'த.நா. 74 என் 1813' என்ற ஒரே பதிவு எண்ணில் 3 தோற்றத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்ட அந்த 3 பஸ்களின் படங்களும் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாக பரவியது. இது 'வாட்ஸ் அப்' உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் விவாத பொருளாக உருவெடுத்தது.

    பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் தங்களது கமெண்டில் தமிழக அரசை வசை பாடி வருகிறார்கள். ஒரே பதிவு எண்ணில் 3 பஸ்கள் ஓடுவது சாத்தியமா? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், இது திரிக்கப்பட்ட தகவல் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    'த.நா. 74 என் 1813' என்ற இந்த பஸ் 8-2-2017 அன்று புதிய பஸ்சாக கூண்டு கட்டி 9-3-2017 முதல் புறநகர் பஸ்சாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் தடத்தில் இயக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து இந்த பஸ்சுக்கு பதில் புதிய பஸ் இயக்கப்பட்டதால், 4-1-2020 முதல் இது நகர பஸ்சாக (இருக்கை மாற்றம்) செய்யப்பட்டு இயக்கப்பட்டது.

    இந்த பஸ்சின் வயது 6-ஐ கடந்த நிலையில் அரசாணைப்படி கடந்த 7-10-2023 அன்று இதன் கூண்டு புதுப்பிக்கப்பட்டு நகர பஸ்சாக நாகர்கோவில்-மேல் மிடாலம் தடத்தில் (தடம் எண்: 9ஏ) இயக்கப்பட்டு வருகிறது என்று கன்னியாகுமரி போக்குவரத்து வணிக மேலாளர் தெரிவித்துள்ளார் என்று மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு கொடுத்துள்ள விளக்கத்தின் மூலம் ஒரே பதிவு எண் கொண்ட இந்த ஒரே பஸ், மூன்று கட்டங்களில், மூன்று தோற்றத்தில், மூன்று வழித்தடத்தில் ஓடியது தெரியவந்துள்ளது.

    ஒரே பதிவு எண்ணில், வெவ்வேறு தோற்றத்தில் தனது மூன்று முகத்தை காட்டி சமூக வலைத்தளங்களில் றெக்கை கட்டி பறந்த புதிருக்கு விடையை கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு.

    Next Story
    ×