search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Counterfeit money gang arrest
    X

    பெருந்துறை அருகே கள்ள நோட்டு தயாரித்த 4 பேர் கைது

    • கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.
    • முதியவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திங்களூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் கடைகளில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து 100, 200, 500 ஆகிய போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இதையடுத்து கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.

    இதன் பின்னர் கள்ள நோட்டு புழக்கம் தடுப்பு குறித்து சந்தையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து பழங்களை வாங்கியுள்ளார். இதையடுத்து பணத்தை வாங்கிய விற்பனையாளர் நோட்டை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதன் பின்னர் முதியவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் இக்கரைபள்ளியை சேர்ந்த ஜெயபால் (வயது 70) என்பதும், இவரது மகன் ஜெயராஜ் (40) என்பவர் வீட்டில் யூடியூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த பணத்தை ஜெயபால், அவரது மனைவி சரசு, மகன் ஜெயராஜ் மற்றும் உடன் வேலை செய்யும் மேரி மெட்டில்டா (38) ஆகியோர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்படுத்தினால் மாட்டி கொள்ள மாட்டோம் என்ற எண்ணத்தில் கடந்த 6 மாதமாக சத்தியமங்கலம், கோபி, கொளப்பளூர், திங்களூர், பெருந்துறை போன்ற கிராமபுற சந்தைகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் மீதும் திங்களூர் போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் எந்திரம் 100, 200, 500 ஆகிய போலி நோட்டுகள் கொண்ட ரூ.2.85 லட்சம் கள்ள நோட்டுகளையும், சந்தைக்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்த கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆண்கள் இருவரை பெருந்துறை சிறையிலும், பெண்கள் இருவரை கோவை சிறையிலும் அடைத்தனர். கள்ள நோட்டு தயாரித்து சொகுசு வாழ்க்கை வாழ நினைத்த கும்பல் போலீசாரிடம் சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×