search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுட்டெரிக்கும் கோடை வெயில்: பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு
    X

    சுட்டெரிக்கும் கோடை வெயில்: பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு

    • பாராளுமன்ற தேர்தல் கட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது.
    • தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும்.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.

    ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.

    இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் இப்போது விற்பனை மளமளவென உயர்ந்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் இப்போது விதவிதமாக பீர் வகைகளை கேட்டு வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்காக எப்போதும் தட்டுப்பாடின்றி பீர் வழங்குகிறோம். சூப்பர் ஸ்டிராங்பீர், பிளாக் நைட் மேக்ஸ் சூப்பர் ஸ்டிராங் பிரிமீயம் பீர், பிளாக் பேர்ல் டிரிபிள் சூப்பர் ஸ்டிராங் பீர், கமாண்டோ சூப்பர் ஸ்டிராங் பீர் என பல்வேறு ரக பீர் வகைகள் டாஸ்மாக் கடைகளில் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 40 ஆயிரம் பெட்டி பீர் விற்பனையாகி வருகிறது.

    40 சதவீதம் அளவுக்கு பீர் வகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதால் கூடுதலாக பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மே மாதம் இன்னும் விற்பனை அதிகமாகும் என்பதால் மதுபான தொழிற்சாலைகளில் மது உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×