search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதி ஓட்டுப்பதிவுக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி ஓட்டுப்பதிவுக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.
    • அ.ம.மு.க வேட்பாளர் சிவப்பிரசாத் உள்பட 6 பேர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 96 வேட்பாளர்கள் 121 மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து கடந்த 8-ந் தேதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது 13 பேரின் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

    மேலும் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. அ.ம.மு.க வேட்பாளர் சிவப்பிரசாத் உள்பட 6 பேர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். நேற்று மாலை 3 மணிக்கு பின் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. இந்த பணி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

    இதனையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க வேட்பாளர் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் வாக்களிக்கும் வசதியாக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் இடம் பெறலாம்.

    தற்போது 77 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றில் 77 வேட்பாளர்கள் பெயருக்கு பின் கடைசியாக நோட்டா இடம்பெறும்.

    5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தினாலும் கட்டுப்பாட்டு எந்திரம் ஓட்டுச்சாவடிக்கு ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும். ஒரு கட்டுப்பாடு எந்திரத்தில் 24 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வரை இணைக்க முடியும். தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×