search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் பலி: கட்டிட உரிமையாளர் உள்பட 4 பேர் ஜெயிலில் அடைப்பு

    • இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    ஊட்டி:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ. இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் அடுத்த காந்தி நகரில் கடந்த 6 மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    தற்போது அங்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக அருகே உள்ள நகராட்சி கழிப்பறையையொட்டி 30 அடிக்கு மண்ணை வெட்டி எடுத்தனர். இதனால் கழிப்பறை அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இதனை யாரும் பொருட்படுத்தவிலை.

    நேற்று இங்கு பெண்கள் உள்பட 17 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். காலையில் பணியாளர்கள் அனைவரும் பணி நடந்த இடத்தின் அருகிலேயே அமர்ந்து டீ குடித்தனர்.

    அப்போது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த கழிப்பறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அத்துடன் மண்சரிவும் ஏற்பட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

    இருந்த போதிலும் 12 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் மேல்காந்தி நகரை சேர்ந்த சகீலா (வயது30), பாக்கியலட்சுமி(42), சங்கீதா(35), ராதா(38), மேல் தலையாட்டு மந்துவை சேர்ந்த உமா(35), முத்து லட்சுமி ஆகிய 6 பேர் பிணமாகவே மீட்கப்பட்டனர்.வண்ணாரப்பேட் டையை சேர்ந்த நந்தகுமார்(25), கவுதம்(24), மகேஷ்(23), தாமஸ் (25), ஜெயந்தி (55), சாந்தி (45) ஆகிய 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் திரண்டனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பவ இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஊட்டி லவ்டேல் போலீசார் கட்டி உரிமையாளர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேற்பார்வையாளர்கள் ஜாகீர் அகமது, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது அவர்கள் 4 பேரையும் வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவி னர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டது.

    ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது.

    இதையடுத்து நள்ளிரவில் ஊட்டி தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. மகராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், தாசில்தார் சரவணன் ஆகியோர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையின் முடிவில் உறவினர்கள், இறந்த 6 பேரின் உடலை வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று காலை இறந்த 6 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே இங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த அளவை மீறி கட்டப்பட்டுள்ளதும், அதிக சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    Next Story
    ×