search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு கெத்து காட்டிய 700 காளைகள்- மல்லுக்கட்டிய 450 வீரர்கள்
    X

    திருச்சி கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு கெத்து காட்டிய 700 காளைகள்- மல்லுக்கட்டிய 450 வீரர்கள்

    • ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    டால்மியாபுரம்:

    கல்லக்குடி பேரூராட்சியில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியினை ஆர்.டி.ஓ. சிவசுப்பிரமணியன், லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம், தாசில்தார் முருகன், கல்லக்குடி பேரூரட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, ஊட்டத்தூர் ஊராட்சி மன்ற இந்திரா அறிவழகன், அன்பழகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மாடு பிடி களமானது எந்த வித வளைவுகளும் இன்றி நேர் பாதையாக அமைந்ததால், காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியில் வந்து, வீரர்களை சுழற்றி அடித்து நேராக புயலென விரைந்து சென்று கெத்து காட்டின.

    காளைகள் கெத்து காட்டினால் வீரர்கள் சும்மா இருப்பார்களா? சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடிக்க 450 வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் களமிறக்கப்பட்டனர். இவர்கள் அணி அணியாக மாடு பிடி களத்திற்குள் வந்து புயலென வாடி வாசலை விட்டு வெளியில் வந்த காளைகளை, லாவகமா மதில்களை தழுவி, தங்களின் புஜ பலத்தால் காளைகளை வீரர்கள் அடக்கினர்.

    திமிழ் உள்ள திமிரல், பாய்ந்து வந்து, காளைகள் வீரர்களை சிதறடித்தபோது, உன் திமிழ் பிடித்து, தமிரை அடக்குகிறேன் பார் என்று காளையர்கள் வீரம் காட்டிய போதும், பார்வையாளர்கள் மெய் சிலிர்த்து உற்சாகமாக கரகோஷம் எழுப்பி, கத்திய சத்தம் விண்ணை பிளந்தது. சிறப்பாய் சீற்றம் காட்டிய காளையின் உரிமையாளர்களுக்கும், பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடை பெற்றதோடு, மாடுகள் காயமடைந்தால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் காயமடையும் இளைஞர்களுக்கு சிசிக்கை அளிப்பதற்காக அவசர கால ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர். கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×