search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வால்பாறை ரோட்டில் பட்டப்பகலில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை- பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
    X

    வால்பாறை ரோட்டில் பட்டப்பகலில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை- பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

    • எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் ரோட்டில் சுற்றி திரிந்து வருகிறது.
    • தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிங்கோனா எஸ்டேட் பகுதியில் அந்த யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி திரிகிறது. அவற்றை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அவை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் ரோட்டில் சுற்றி திரிந்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக ஒற்றை காட்டுயானை கடந்த சில நாட்களாக சின்கோனா பகுதியில் சுற்றி திரிகிறது. அது இரவுநேரத்தில் பஸ்சை வழிமறிப்பதும், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிவதுமாக அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் சின்கோனா- பெரியகல்லார் சாலையில் நேற்று மதியம் ஒற்றை காட்டுயானை பட்டப்பகலில் உலா வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேயிலை பறிக்கும் தொழி லாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பாதுகாப்பான இடம் தேடி தஞ்சம் அடைந்தனர்.

    இதற்கிடையே காட்டு யானை நடமாட்டம் பற்றி தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரோட்டில் பட்டப்பகலில் நடந்து சென்ற ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    வால்பாறை சின்கோனா ரோட்டில் ஒற்றை காட்டு யானை பட்டப்பகலில் நடந்துசென்ற சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×