search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2026-ம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான்- வைத்திலிங்கம்
    X

    2026-ம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான்- வைத்திலிங்கம்

    • நாங்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை.
    • அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தஞ்சையில் அவருக்கு நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இருக்கிற அ.தி.மு.க. தொண்டர்களில் 100 சதவீதத்தில் 99.9 சதவீதம் பேர் அ.தி.மு.க. இணைய வேண்டும். 2026-ல் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சி கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை நிச்சயமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 2026-ல் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி ஏற்படும்.

    நாங்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களாக வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். அதாவது ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்பது இணையும்போது ஒரு முடிவுக்கு வரும். அடுத்த ஆண்டு (2025) டிசம்பர் மாதத்திற்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும்.

    பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் செயல்பாடுகள், சட்டமன்ற தேர்தலில் அவர்களின் செயல்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை அழித்து விடுவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். உண்மையும் அதுதான். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாங்கள் அ.ம.மு.க., தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். அன்றைக்கு நாம் தனித்து நின்று 150 இடத்திற்கு மேல் வந்து விடலாம் என்று சொல்லி எல்லோரையும் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். அதுபோல பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி வரும், 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று விடலாம் என்று கூறினார். ஆனால், 20 சதவீத வாக்குகள் வரும் அளவுக்கு மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார். சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். டிசம்பருக்குள் நிச்சயம் ஒற்றுமை வரும். 2026-ம் ஆண்டு நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×