search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னரின் தயவால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தப்பித்து வருகின்றனர்- டி.டி.வி.தினகரன்
    X

    கவர்னரின் தயவால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தப்பித்து வருகின்றனர்- டி.டி.வி.தினகரன்

    • எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்.
    • வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லையில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் இளைஞர் படை அதிகம் உள்ள கட்சி அ.ம.மு.க. ஜெயலலிதாவின் கொள்கைகளை நூற்றாண்டுகளுக்கு எடுத்துரைப்பதே எங்களின் லட்சியம். தேர்தல் வெற்றி, தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் கொள்கையை தாங்கி பிடிப்போம். நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீருவார்கள்.

    எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும். கவர்னரின் தயவினால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தப்பித்து வருகின்றனர். அவர்களை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள்.

    எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக சீர்கேட்டினாலும், தி.மு.க. திருந்தியிருக்கும் என்றும் நினைத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.விற்கு வெற்றிக்கனியை தந்தனர். வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதைய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு ஏமாற்று திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது.

    மகளிர் உரிமை திட்டம் தகுதியான பலருக்கும் கிடைக்கவில்லை. சிறு-குறு தொழில் முனைவோர் கடுமையான மின்கட்டண உயர்வால் திணறி வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் ரத்தாகி உள்ளது. அரசின் கடன் சுமையை குறைப்போம் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி மறக்கப்பட்டு கடன் சுமை அதிகரித்துள்ளது.

    கூட்டணி பலத்தால் வெற்றியாளர்களை போல் காட்டி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் தி.மு.க. உள்ளது. அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும். வருகிற தேர்தலில் தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பதே அ.ம.மு.க. வின் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×