search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    Anbumani Ramadoss
    X

    மின் கட்டண உயர்வால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன- அன்புமணி

    • கனிமவள கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
    • கோவை மாநகரில் 80 விழுக்காடு சாலைகள் பழுதடைந்துள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு பல நிறுவனங்கள் மூடிய பிறகும், தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் 3 முறை மின் கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது. 23 மாதங்களில் கிட்டத்தட்ட 34 விழுக்காடு மின்கட்டணத்தை தி.மு.க அரசு உயர்த்தி உள்ளது.

    இதனால் தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக சிறு, குறு தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. மின்கட்டண உயர்வால் கடந்த 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    எனவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்ததும் மாதம், மாதம் மின் கணக்கீடு செய்யப்படும் என அறிவித்தது. எனவே தாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று மாதம், மாதம் மின் கட்டணம் கணக்கீடு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    கோவையில் கனிமவள கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. பாமக சார்பில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பு காரணமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு இதில் மெத்தனம் காட்டி வருகிறது. இதிலிருந்து தான் பலருக்கும் வருமானம் செல்கிறது.

    மின் கட்டண உயர்வுக்கு காரணம் மின்சாரத் துறையில் சரியான நிர்வாகம் இல்லாததும், ஊழலும் தான் காரணம்.

    கோவை மாநகரில் 80 விழுக்காடு சாலைகள் பழுதடைந்துள்ளது. கோவை மேயர் ஏன் பதவி விலகினார் என விசாரணை நடத்த வேண்டும். வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க பல லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளில் உரிய விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. மதுவை கொடுத்து 3 தலைமுறை நாசப்படுத்தியது போல கஞ்சாவை கொடுத்து இந்த தலைமுறையை நாசப்படுத்தி வருகின்றனர்.

    தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதற்கான அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு இருக்கிறது. பீஹார், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒரிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இவ்வளவு மாநில முதல்வர்களுக்கும் அதிகாரம் இருக்கும்போது தமிழக முதல்வருக்கு இல்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் காரணமாக இந்த விவகாரத்தில் முதல்வர் தயங்குகிறார்.

    இதுவரை நடந்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எல்லா மாநிலத்தின் பெயரை கூறியுள்ளனரா? காங்கிரஸ் எல்லா மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் சொல்லியுள்ளதா. திட்டங்கள் வரும். தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை என்னென்னவென்று தெரியவரும். பெயர் சொல்லவில்லை என புறக்கணிக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

    தமிழகத்தின் உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது. கோயம்புத்தூர் மெட்ரோவிற்கு நிதியை சண்டை போட்டு கட்டாயம் வாங்குவோம்.

    நீட் தேர்வு இருக்கக்கூடாது அது தேவையில்லாத தேர்வு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப அதன் கொள்கைகளை விட்டு விட வேண்டும். நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, சமூக நீதி மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரானது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×