search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை மீண்டும் நடைபயணம்: நாதஸ்வர கலைஞர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
    X

    அண்ணாமலை மீண்டும் நடைபயணம்: நாதஸ்வர கலைஞர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

    • பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அருப்புக் கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் முன்பு மக்களிடையே பேசுகிறார்.

    காரியாபட்டி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் கடந்த மாதம் 28-ந்தேதி ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் அவர் பாதயாத்திரையாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டதோடு, மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறினார்.

    மேலும் புகார் பெட்டியையும் கையோடு எடுத்துச்சென்ற அண்ணாமலை அதில் பொதுமக்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தி.மு.க. அரசின் ஊழல் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வரும் அவருடன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஒருவரையொருவர் மாறி மாறி வசைபாடினர். இதனால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ரத்தானது. மறுநாள் நடைபயணமும் கைவிடப்பட்டது.

    மதுரையில் இருந்து சென்னை சென்ற அண்ணாமாலை 2 நாட்களாக ஓய்வெடுத்தார். இன்று மீண்டும் அவர் நடைபயணத்தை தொடங்கினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பத்திரபதிவு அலுவலகம் முன்பு பாதயாத்திரையை தொடங்கிய அவர், பஜார், காவல்நிலையம், ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில் பழுதடைந்த காலனி வீடுகளை அப்பகுதியினர் கேட்டுக்கொண்டதன் பேரில் பார்வையிட்டார்.

    காலனி வீடுகளுக்குள் சென்ற அண்ணாமலை, பழுதடைந்து இருந்த வீட்டின் உரிமையாளர்களிடம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் பனை ஓலையால் தயாரிக்கப்படும் பெட்டிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வரும் நாதஸ்வர கலைஞர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

    பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பள்ளத்துப்பட்டி, அரசு மருத்துவமனை, கள்ளிக்குடி சாலை, முக்குரோடு, பேருந்து நிலையம் வழியாக பாதயாத்திரை சென்ற அவர் தொடர்ந்து பிற்பகலில் திருச்சுழியில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர், அங்கு ரமண மகரிஷி இல்லத்திற்கு செல்கிறார். விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார்.

    அருப்புக்கோட்டை காந்தி நகர் வந்து மதிய ஓய்வுக்கு பின்பு பாளையம் பட்டியில் இருந்து மாலை 4 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். அருப்புக் கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் முன்பு மக்களிடையே பேசுகிறார். இதனை தொடர்ந்து இரவு ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு விருதுநகர் பாண்டியன் நகர் தலைமை தபால் நிலையம் முன்பிருந்து தனது நடை பயணத்தை தொடங்குகிறார். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பீடர் ரோடு, பழைய பஸ் நிலையம், வெயில் உகந்த அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், மெயின் பஜார், நகராட்சி அலுவலகம், இன் னாசியார் தேவாலயம் வழியாக சாத்தூர் ரோடு சந் திப்பில் எம்.ஜி.ஆர். சிலை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் அவர் மாலையில் சிவகாசியில் தொழில் அதிபரை சந்திக்கிறார். நாளை மறுநாள் சாத்தூரில் நடைபயணம், மேற்கொள்ளும் அவர் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். இதில் அண்ணாமலையுடன் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

    Next Story
    ×