search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதனத்தை ஒழிப்பதாக கூறும் இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெறாது- அண்ணாமலை ஆவேசம்
    X

    சனாதனத்தை ஒழிப்பதாக கூறும் இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெறாது- அண்ணாமலை ஆவேசம்

    • கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
    • உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

    பழனி:

    என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். மாரியம்மன் கோவில் தேரடி வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலும் இதே நிலை ஏற்படும். 2014க்கு முன்பு 60 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பா.ஜ.க. 15 ஆண்டுகள்தான் ஆட்சி செய்திருக்கிறது. ஆனால் இந்த 15 ஆண்டுகளில் 200 வருடங்கள் கழித்து எப்படி இருக்க வேண்டுமோ? அதுபோன்ற வளர்ச்சியை கண்டுள்ளது.

    இந்தியாவில் மட்டும் 47 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது. தனி மனித வருமானம் உயர்ந்திருக்கிறது. உள்நாட்டு பிரச்சினைகள் அனைத்தையும் பா.ஜ.க. அரசு சரி செய்து உள்ளது. 3-வது முறையாக மோடி 2024-ம் ஆண்டு பிரதமராக அமரும்போது இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும்.

    தற்போது அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் பேமிலி கோட்டாவில் உள்ளனர். குடும்ப கோட்டாவில் சீட் வாங்கி ஜெயிப்பதுதான் தி.மு.க.வின் பார்முலா.

    முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை வாரிசு அரசியல் கூடாது என்றார். அவரது கொள்கையை கடைபிடிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. மட்டும்தான். தி.மு.க. அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய ஒரு கட்சி. ஏழை மக்களின் வலி அவர்களுக்கு தெரியாது.

    காங்கிரசை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர்கள் மம்தாவும், கெஜ்ரிவாலும்.

    தற்போது இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். இதை மக்கள் எவ்வாறு ஏற்பார்கள். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. சனாதனத்தை ஒழிப்பதும், இந்து தர்மத்தை ஒழிப்பதும்தான் இந்தியா கூட்டணியின் கொள்கை. இந்த கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது. 400 எம்.பி.க்களோடு மோடியை மீண்டும் பிரதமராக அமர வைக்க வேண்டும். தமிழகத்தில் இந்து கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் களவு போகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்ற நிலை ஏற்படும். பழனி கோவில் சொத்துக்களும் தொடர்ந்து மாயமாகி வருகின்றன. எனவே அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகால எதிர்காலத்தை யோசித்து பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×