search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊத்து தொழிற்சாலை பகுதியில் நடமாடும் அரிக்கொம்பன் யானை
    X

    ஊத்து தொழிற்சாலை பகுதியில் நடமாடும் அரிக்கொம்பன் யானை

    • இன்று அதிகாலை அரிக்கொம்பன் யானை ஊத்து எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்து வருவதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர்.
    • அரிக்கொம்பனை தற்போது நாங்களாக அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் தேனி மாவட்ட மக்களை பீதியடைய செய்த அரிக்கொம்பன் யானையை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிடித்து வந்து மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, மேல் கோதையாறு அணை வழியாக கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதியில் வனத்துறையினர் விட்டனர். பின்னர் அதன் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அதன் கழுத்தில் ரேடார் கருவியும் பொருத்தினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை திடீரென்று புகுந்தது. நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வீடுகளின் முன்பு இருந்த வாழை மரங்களை சாய்த்தும், வாழைத்தார்களை தின்றும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர். நேற்று அதிகாலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் யானை நிற்பதாக வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் யானை அங்கு இல்லை.

    இதனால் அம்பை, களக்காடு வனக்கோட்டங்களை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அரிக் கொம்பன் யானை ஊத்து எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்து வருவதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர். தொடர்ந்து அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கூறியதாவது:-

    அரிக்கொம்பன் யானை இன்று காலை 8 மணி நிலவரப்படி ஊத்து எஸ்டேட்டில் சற்று தொலைவில் உள்ள ஆர்கானிக் தொழிற்சாலை அருகே நடமாடி வருகிறது. தற்போது அதற்கு மஸ்து எனப்படும் மதநீர் குறைந்து இயல்பு நிலையில் இருக்கிறது.

    நேற்று இரவு நாலுமுக்கு-ஊத்து சாலை பகுதியில் அடர்ந்த மூடுபனி காணப்பட்டதால் எங்களால் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ரேடார் கருவியில் எந்த பழுதும் இல்லை. தற்போது வரை அந்த ரேடார் சீரான இயக்கத்திலேயே உள்ளது.

    அரிக்கொம்பனை தற்போது நாங்களாக அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அதன் நடமாட்டத்தை மட்டுமே கண்காணித்து வருகிறோம். ஏனெனில் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். நாம் அரிக்கொம்பனை விரட்ட முயற்சிக்கும்போது, அது எங்கு செல்வது என்று தெரியாமல் குடியிருப்புக்குள் புகுந்து விட்டால் ஆபத்தாகி விடும்.

    எனவே அரிக்கொம்பனால் தேயிலை தோட்ட குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடாத வண்ணம், அதுவாகவே தானாக வனத்துக்குள் செல்ல வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×