search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேட்டையாடுவது தடுக்கப்பட்டு உள்ளதால் வன கோட்டத்தில் யானைகள் எண்ணிக்கை 720-ஆக அதிகரிப்பு
    X

    வேட்டையாடுவது தடுக்கப்பட்டு உள்ளதால் வன கோட்டத்தில் யானைகள் எண்ணிக்கை 720-ஆக அதிகரிப்பு

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.
    • வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி கேர்மாளம், விளாமுண்டி, தலமலை, பவானிசாகர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

    ஈரோடு வனக்கோட்டத்திற்குள்பட்ட தந்தை பெரியார் வனச்சரணாலயத்தில் ஈரோடு, அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய 5 வனச்சரகங்களும், சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட 20 வனச்சரகங்களும், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் உள்ளிட்ட 8 வனச்சரகங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.

    இந்த வனச்சரணாலய பகுதிகளில் ஆயிரக்கணக்கான யானைகள் வசித்து வருகின்றன. வனச்சூழலையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் யானைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்தும் வகையில் தமிழக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வனச்சரணாலயப் பகுதிகளில் ஒவ்வொரு வனச்சரகத்திலும் வசிக்கும் யானைகள் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன.

    தற்போது வனச்சரகங்களில் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்தப் பகுதிகளில் வசிக்கும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல்களை மத்திய வனத்துறை மூலம் அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாப்பாளர் ராஜ்குமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கி அதன் தொடர்ச்சியாக உள்ள மோயாறு பள்ளத்தாக்கு, சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர் வனக்கோட்டம் வரையிலான பகுதிகளில் இந்த ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

    சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பொறுத்த வரை கடந்த ஆண்டில் 720-க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது. தமிழகத்தில் நடைபெற்றதை போலவே அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரித்து இறுதியாக வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.

    சத்தியமங்கலம் வனக்கோட்டத்தைப் பொருத்த வரை யானைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளதால் யானைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை. யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பதை யானைகளின் வழித்தடங்களில் எடுக்கப்பட்ட ஒட்டு மொத்தமாக கணக்கீட்டின் அடிப்படையிலேயே தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×