search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம்:  கருணாநிதியால் உருவாக்கப்பட்டது-  அமைச்சர் பேட்டி
    X

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: கருணாநிதியால் உருவாக்கப்பட்டது- அமைச்சர் பேட்டி

    • முழு ஒத்துழைப்பு அளித்த விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் பாராட்டுகிறோம்.
    • ஒரு சிலர் நிலம் தர விருப்பம் இல்லாமல் இருந்தார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் முதலாவது நீரேற்று நிலையத்தில் இன்று வீட்டு வசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. அதன் பிறகு பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் விவசாயிகள் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பவானி அடுத்த காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து உபரி நீரை பம்ப் செய்ய 3 மோட்டார் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவில்லை. இதனால் பைப்லைன் போடப்படவில்லை.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை விரைவுப்படுத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த 3 முதல் மோட்டார் பம்ப் ஹவுஸ் பகுதிகளில் இடம் வாங்கப்பட்டது. அதன் பிறகு பணிகள் துரித படுத்தப்பட்டு கடந்த ஜனவரி 2023 முடிவடைந்தது. ஆனால் பவானி ஆற்றில் உபரி நீர் வரவில்லை. தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் வருகிறது. நேற்று ஆயிரம் கன அடி வந்தது.

    காலிங்கராயன் அணைக்கட்டு பகுதி கால்வாயில் இருந்து 1.5 டிஎம்சி மொத்தம் உள்ள 6 நீரேற்று நிலையங்கள் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் பகுதியில் உள்ள 1045 குளங்களுக்கும் அனுப்பப்படும். முக்கிய பைப் லைன் 8 அடி விட்டம் உள்ளது. அது 105 கிலோமீட்டர் உள்ளது. இதை தவிர குளங்களுக்கு செல்லும் பீடர் லைன் சுமார் ஆயிரத்து 65 கிலோ மீட்டர் உள்ளது. நாங்கள் சோதனை செய்தபோது சில இடங்களில் பழுதடைந்து இருந்தது. அதை எல்லாம் நாங்கள் சரி செய்தோம். கீழ்பவானி பாசன கால்வாய்க்கு 15-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அதிலிருந்து வரும் கசிவு நீர் 10 அல்லது 15 நாட்களுக்குள் காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதிக்கு வந்துவிடும். அதன் பிறகு தொடர்ந்து 70 நாட்களுக்கு இங்கிருந்து 1.5 டிஎம்சி நீர் 1045 குளங்களிலும் நிரப்பப்படும். இதை தவிர பவானி ஆற்றில் பெய்த மழையால் தற்போது அணைக்கட்டு பகுதிக்கு உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மொத்தமுள்ள 1045 குளங்களில் 1020 குள ங்களுக்கு நீர் சென்றுவிடும். ஒரு சில இடங்களில் பைப் லைனில் பழுது உள்ளதால் அங்கு தண்ணீர் செல்லவில்லை. அதுவும் சரி செய்யப்பட்டு விடும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏன் இதை திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கேட்டுள்ளார். உபரி நீர் தற்போது தான் வந்துள்ளது. அதனால் தான் திட்டத்தை இப்போது துவக்கி வைத்துள்ளோம். உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வராமல் இருந்தால் இத்திட்டத்தை துவக்கி வைத்து குளங்களுக்கு நீர் அனுப்ப முடியாது. ஒரு தடை ஏற்பட்டிருக்கும்.

    அப்போது அரசை அண்ணாமலை குறை சொல்வார். எனவே தான் இந்த அரசு கவனமாக உபரி நீர் வந்த பிறகு திட்டத்தை துவக்கி வைத்துள்ளது. இந்த அரசு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், விவசாயிகள் பயனடைய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டது. விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட நிலங்களுக்கு நட்ட ஈடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஒரு சிலர் நிலம் தர விருப்பம் இல்லாமல் இருந்தார்கள். அவரிடம் பேசி நிலத்தை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கென்று தனி அரசாணை வெளியிடப்படும். இன்னும் சில தினங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்பட்டு விடும். மற்ற திட்டத்தைப் போல் அல்லாமல் இத்திட்டத்தில் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்த விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் பாராட்டுகிறோம். முழுமையாக பணிகள் முடிந்துள்ளது. ஒரு சில பணிகள் பாக்கி உள்ளன. ஒப்பந்ததாரர் லாசன் ட்யூப்ரோ நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு திட்டத்தை பராமரிக்கும் பணியையும் மேற்கொள்ளும். சில குளங்கள் விடுபட்டுள்ளன.

    அந்த குளங்களுக்கு திட்டத்தின் மூலம் நீர் வழங்கும் வாய்ப்பு இல்லை. இப்போது வரும் நீரை கொண்டு 1045 குளங்களுக்கு நீர் நிரப்பப்படும். விடுபட்ட குளங்களுக்கு என்றால் தனியாக திட்டம் போட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×