search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்- அமைச்சர் ஆய்வு
    X

    பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்- அமைச்சர் ஆய்வு

    • வாய்க்கால் சீரமைப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
    • கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. வாய்க்கால் சீரமைப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.

    எனவே நீர் திறப்பை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர். தொடக்கத்தில் 250 கன அடியாக இருந்த தண்ணீர் திறப்பு தற்போது 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நேற்று மாலை 57-வது மைலைக் கடந்த நிலையில் 47 ஆவது மைல் பகுதியாக உள்ள நல்லாம்பட்டியில் உள்ள மழைநீர் வடிகால் பாலத்தில் நேற்று மாலை விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சிறிது சிறிதாக அதிகரித்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது.

    தொடர்ந்து விரிசல் அதிகரித்தால் மழைநீர் கால்வாய் உடையும் அபாயம் இருப்பதாக கருதி அப்பகுதி விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டது.

    வாய்க்காலில் கசிவு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

    இது குறித்து மழைநீர் வடிகால் விரிசலை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் இரவோடு இரவாக தொடங்கினர்.

    இதுக்கு அடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், நல்லாம்பட்டி வாய்க்காலுக்கு அடியே மழை நீரும் வாய்க்கால் கசிவு நீரும் வடிந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை உள்ளது.

    இந்த சுரங்கப்பாதையின் வழியாக மழை பெய்யும் போதும் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும் போதும் வழக்கமாக தண்ணீர் வெளியேறுவது வழக்கம் தான். இதைத்தான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதாக சிலர் வதந்தி கிளம்பி விட்டிருக்கிறார்கள். தற்போது சுரங்கப்பாதைக்குள் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை கண்டுபிடித்து அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று காலை நல்லாம்பட்டி அருகே ஒட்டங்காடு பகுதியில் கீழ்பவானி கால்வாயின் 47வது மைலில் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள கசிவு பகுதியை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

    இந்த மழைநீர் வடிகால் மிகவும் பழமையானது.இந்தாண்டு மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணிக்கு போதிய அவகாசம் இல்லை. அடுத்தாண்டு இந்த வடிகாலை சீரமைக்க திட்டம் உள்ளது.

    கீழ் பவானி வாய்க்காலில் இருந்து வெளியேறும் கசிவு நீர்


    இதில் எப்போதும் தண்ணீர் செல்லும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தாண்டு சற்று கூடுதலாக செல்வதாக சந்தேகம் எழுந்ததால் இடையில் நிறுத்தி சீரமைக்கும் பணியானது முடிக்க வேண்டும் என்பதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

    தற்காலிகமாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்விற்கு குறைந்த பட்சம் 15 நாட்கள் ஏற்படும் என்பதால் தற்காலிக பணிகள் மூலம் இந்த போகத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால் உள்ளது. அவற்றில் எந்தவித பாதிப்பும் இல்லை. இனி தண்ணீர் செல்லும் போது மழைநீர் வடிகாலில் கசிவு ஏற்பட்டால் அங்கும் தற்காலிக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழ்பவானி கால்வாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதன் கசிவு நீரை பயன்படுத்தும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் கூடுதலாக கசிவு சென்றுகொண்டிருக்கிறது என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×