search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 2-ம் கட்ட நடைபயணம்: ஆலங்குளத்தில் இன்று மாலை தொடக்கம்
    X

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 2-ம் கட்ட நடைபயணம்: ஆலங்குளத்தில் இன்று மாலை தொடக்கம்

    • முதல்கட்ட நடைபயணத்தில் மாநில தலைவர் அண்ணாமலை மொத்தம் 178 கிலோமீட்டர் நடந்தார்.
    • பயணத்தின்போது தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து பேசினார்.

    நெல்லை:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கான பணிகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் மேற்பார்வையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்திலும் அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    மொத்தம் 3 கட்டங்களாக 6 மாதத்திற்கு அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை தனது பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசினார்.

    தொடர்ந்து அண்ணாமலை ராமநாதபுரம், சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், திருமயம் வழியாக கடந்த ஆகஸ்ட் 3-ந்தேதி காரைக்குடி சென்றார். பின்னர் மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் 4, 5-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 13-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொண்டார்.

    இதையடுத்து கன்னியாகுமரி சென்ற அவர் அங்கு நடைபயணத்தை முடித்த பின்னர் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு வந்தார். கடந்த 19-ந்தேதி பாளையில் நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து 22-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் சென்றார். நெல்லை டவுனில் கடந்த 22-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை தனது முதல் கட்ட யாத்திரையை நிறைவு செய்தார். இந்த நடைபயணத்தில் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொண்டார்.

    இவ்வாறாக மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார். இதில் 7 பாராளுமன்ற தொகுதிகளும் அடங்கும். இந்த முதல்கட்ட நடைபயணத்தில் மாநில தலைவர் அண்ணாமலை மொத்தம் 178 கிலோமீட்டர் நடந்தார். இந்த பயணத்தின்போது தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் அண்ணாமலை தனது 2-ம் கட்ட நடைபயணத்தை இன்று மாலை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி அண்ணாமலை வந்தார். அங்கிருந்து காரில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார்.

    அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தனது 2-வது கட்ட நடைபயணத்தை தொடங்குகிறார். அதன்படி மாலை 3 மணிக்கு பொட்டல்புதூரில் தொடங்கி 5 மணிக்கு கடையம் பஸ் நிலையத்தில் நடைபயணத்தை முடிக்கிறார். தொடர்ந்து தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூரில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு வந்தடைகிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கடையநல்லூரில் தொடங்கி கிருஷ்ணாபுரம் வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியங்குடி எலுமிச்சை சந்தையில் தொடங்கி சிந்தாமணி வரையிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம் தொடங்கியிருப்பதையொட்டி தென்காசி மாவட்ட பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×