search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலில் மீன் பிடித்தபோது விபரீதம்- கோடியக்கரை அருகே படகு மோதி மீனவர் பலி
    X

    கடலில் மீன் பிடித்தபோது விபரீதம்- கோடியக்கரை அருகே படகு மோதி மீனவர் பலி

    • பைபர் படகு கவிழ்ந்து 3 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
    • ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்தவர் எல்லப்பன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 58), முருகவேல் (40) மற்றும் எல்லையப்பன் ஆகிய 3 மீனவர்களும் வேதாரண்யம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 12 கடல்மைல் தொலைவில் நள்ளிரவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு எதிர்பாராத விதமாக பைபர் படகில் மோதியது. இதில் பைபர் படகு கவிழ்ந்து 3 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

    இதைத் தொடர்ந்து மோதிய விசைப்படகு சம்பவ இடத்திற்கு சென்று 3 மீனவர்களையும் மீட்டனர். அப்போது ராஜேந்திரன் என்ற மீனவர் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

    உடனடியாக அருகே உள்ள கோடியக்கரை கடற்கரைக்கு ராஜேந்திரன் உடலையும், மற்ற 2 மீனவர்கள் எல்லையப்பன், முருகவேல் ஆகியோரை கொண்டு வந்து சேர்த்தனர். கடலில் முழ்கிய படகை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து படகு உரிமையாளர் எல்லப்பன் வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    படகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவம் மீனவர் கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விபத்தில் பலியான ராஜேந்திரனுக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×