search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா- இங்கிலாந்து அரசுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா- இங்கிலாந்து அரசுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • தமிழ்நாட்டின் பூர்வீக அரிய வகை, மற்றும் தாவர இனங்களை பாதுகாப்பதே இப்பூங்கா அமைப்பதற்கான நோக்கமாகும்.
    • சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு எடுத்துரைத்தார்.

    சென்னை:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்புடன் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகில் உள்ள கடம்பூர் கிராமத்தில் தாவரவியல் பூங்கா ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டின் பூர்வீக அரிய வகை, மற்றும் தாவர இனங்களை பாதுகாப்பதே இப்பூங்கா அமைப்பதற்கான நோக்கமாகும்.

    தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் மற்றும் இங்கிலாந்து அரசின், சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறை மந்திரி தெரஸ் கோபே ஆகியோரது முன்னிலையில், தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் கியூ கார்டன் இயக்குனர் ரிச்சர்ட் டெவெரெல் ஆகியோருக்கு இடையே இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    தொழிற்சாலைகளில் கரிம குறைப்புக்கான முன்முயற்சியின் பிரதியமைப்பாக, தொழிற்சாலைகளில் பசுமை அட்டவணைப்படுத்துதல் தமிழ்நாட்டின் குறைந்த கரிம தொழில் மேம்பாட்டிற்கான வழிகாட்டும் வரைபடத்தை இங்கிலாந்து மந்திரி கிரஹாம் ஸ்டூவர்ட் மற்றும் தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

    தொழில்முறைகளில் குறை கரிம கொள்கையினை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும், 2070-ம் ஆண்டுக்கு முன்பு நிகர பூஜ்ஜிய உமிழ்வின்மை என்னும் இலக்கினை எட்டும் இம்மாநில அரசின் காலநிலை மாற்ற இலக்கினை அடையவும் தொழிற்சாலைகளுக்கான பசுமை மதிப்பீடு கட்டமைப்பும் தொடங்கி வைக்கப்பட்டது.

    தொழில்துறைகளில் பசுமை மதிப்பீடு நுட்பம் தொடர்பான தன்னார்வ பயிற்சிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல முயற்சிகள் எடுத்து வருவதாக, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு எடுத்துரைத்தார்.

    தொழிற்சாலைகள் எதிர்காலத்தில் பசுமை மதிப்பீடு வரையளவில் பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல அந்தஸ்தை பெற தானாக முன்வர எடுக்கப்படும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதை அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணை உயர் கமிஷனர் ஆலிவர் பால்ஹட்செட், இங்கிலாந்து அரசின் வளர்ச்சி, காலநிலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சாலி டெய்லர், கியூ கார்டன் இயக்குனர் ரிச்சர்ட் டெவெரெல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×