search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுத்திணறி 2 பேர் பலி- முதலமைச்சர் இரங்கல்
    X

    தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுத்திணறி 2 பேர் பலி- முதலமைச்சர் இரங்கல்

    • கான்கிரீட் போட அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் பலகைகளை பிரிக்க மனோஜ் என்பவர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    கோவை சின்னவேடம்பட்டியை அடுத்த உடையாம்பாளையம் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 47) என்பவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணிகளை தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த கோவிந்தனின் மகன் குமார் (29) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மேஸ்திரியான குமார், தனது வேலை ஆட்களான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (27) மற்றும் சிலருடன் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு புதிதாக தண்ணீர் தொட்டிக்கு கான்கிரீட் போடப்பட்டிருந்தது.

    நேற்று மாலையில் இந்த தண்ணீர் தொட்டியின் உட்பகுதியில் கான்கிரீட் போட அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் பலகைகளை பிரிக்க மனோஜ் என்பவர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது தொட்டிக்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறி தொட்டிக்குள் மனோஜ் மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த குமார் ஓடி வந்து தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி அவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அவரும் மூச்சுத்திணறி விழுந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    நேற்று மாலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த குமார், மனோஜ் இருவரும் கட்டிடம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இறங்கி வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் 2 பேரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×