search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை மீது வழக்கு: திமுக அரசைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கரு.நாகராஜன், குஷ்பூ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    சென்னை:

    வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ மற்றும் மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், திருப்பதி நாராயணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அண்ணாமலை மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய குஷ்பு, திமுக அரசை விமர்சனம் செய்தார். ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகக்கு மட்டும்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

    துணைத்தலைவர் கரு.நாகராஜன் பேசியதாவது:-

    அண்ணாமலை போன்ற இமாலய தலைவர் மீது வழக்கு போட்டால் மிரண்டு போய் அறையில் உட்கார்ந்துவிடுவார் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் அது தவறு. 153, 501 ஆகிய பிரிவுகளில் வழக்கு போட்டது நீங்கள். ஆனால் நாகர்கோவிலில் போய் பயந்து உளறியது யார்? முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    வழக்கு போட்ட இரண்டாவது நாள் நாகர்கோவிலுக்கு சென்று பேசிய அவர், 'ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள்' என்றார். யார் ஆட்சியை கலைக்கப் பார்த்தது? நமது தலைவர்கள் யாராவது அப்படி சொன்னார்களா?

    திமுக ஆட்சியை இரண்டு முறை ஆட்சியில் இருந்து துரத்திய காங்கிரசோடு கூட்டு சேர்ந்துகொண்டு ஆட்சிக் கலைப்பு பற்றி இவர் பேசுகிறார். எங்கள் தலைவர் மீது 153, 501 ஆகிய பிரிவுகளில் வழக்கு போட்டுவிட்டு, 356ஐ கண்டு பயந்துபோய் நாகர்கோவிலில் பேசுகிறீர்கள். இது வெட்கக்கேடான விஷயம்.

    எதாவது சொல்லி மக்களை குழப்பவேண்டும், மக்களை தூண்டி விட வேண்டும், மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர்காயவேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை. இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×